நம்முடைய சூரிய வட்டத்தின் ஊடாக வெள்ளிக் கோள் கடந்து செல்வதே ”வெள்ளிக் கோளின் சூரியக் கடப்பு” ஆகும். ஜுன் 6. 2012-ல் சூரிய வட்டத்தில் சிறிய கருப்பு வட்டப் புள்ளி நகர்த்து செல்வதை நாம் காணலாம். அந்த கருப்பு வட்ட புள்ளி தான் வெள்ளி கிரகம். அது சூரியனை கடப்பதைத் தான் நாம் நிழலாக ஜுன் 6. 2012-ல் காண்கிறோம்.

சூரியக் குடும்பத்தில் பூமியின் உட்கோளான புதன் மற்றும் பூமிக்கு இடையே அமைந்துள்ளது வெள்ளி. எனவே இவ்விரு கோள்கள் மட்டுமே சூரியனுக்கும் பூமிக்கும் இடையே வர இயலும். (மற்ற கோள்கள் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே வராமல் பூமியின் சுற்றுப்பாதைக்கு வெளியே அமைந்திருக்கிறது.) எனவே, நமக்கு புதனின் சூரியக் கடப்பு மற்றும் வெள்ளியின் சூரியக் கடப்பு என இரண்டும் காணக்கிடைக்கும். ஆனால் இவ்விரண்டும் மிக அரிதான வானியல் நிகழுவுகள் ஆகும், சராசரியாக ஒரு நூற்றாண்டில் 13 முறை மட்டுமே புதனின் சூரியக் கடப்பு நிகழும். அதாவது, சூரியனுக்கும், பூமிக்கும் இடையே, இவ்விரண்டும் இருக்கும் அதே தளத்தின் நடுவே புதன் ஒரு நூற்றாண்டில் 13 முறை மட்டுமே கடந்து செல்லும். இதுவே புதனின் சூரியக் கடப்பாகும். ஆனால் வெள்ளியின் சூரியக் கடப்போ 243 ஆண்டுகளுக்கு 4 முறை மட்டுமே நிகழ்கிறது. கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டிற்கு இரண்டு முறை நிகழ்கிறது. (நிலவும் இதுபோல சூரியனுக்கும், பூமிக்கும் இடையே வருகிறது. அதைத் தான் நாம் சூரிய கிரகணம் என்கிறோம்)
வெள்ளியின் சூரியக் கடப்பின் வரலாறு:
ஜோஹனஸ் கெப்ளர் (Johannes Kepler ) 1571 – 1630
1627ல் ஜோஹனஸ் கெப்ளர் (Johannes Kepler ) என்ற ஜெர்மானிய வானியல் வல்லுநர் முதன்முதலாக சூரியனின் வெள்ளி கடப்பை கண்டறிந்து 1631ல் அது நிகழும் என்பதை கூறித்து வைத்தார். ஆனால் அவ்வருடத்தில், ஐரோப்பாவில் அக்கடப்பு தென்படவில்லை.
ஜெரெமி ஹாரக்ஸ் என்ற இங்கிலாந்தை சேர்ந்த வானியல் அறிஞர் டிசம்பர் 4. 1639-ல் முதன் முதலில் வெள்ளின் சூரியக் கடப்பை கண்டறிந்து ஆய்வு செய்தார். தொலைநோக்கி கண்டறிந்தப் பிறகு பார்க்கப்பட்ட வெள்ளியின் சூரியக் கடப்பும் இதுவே ஆகும்.
ஜெரெமி ஹாரக்ஸ் | JeremiahHorrocks
இந்தியாவில் வெள்ளிக்கோள் கடவுக் ஆய்வுப் பதிவுகள் :
இந்தியாவில் முதல் வெள்ளி கடப்புப் பதிவு 1761 ஜுன் 6-ல் நடந்தது, அதை சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் மதகுரு வில்லியம் ஹிர்ஸ்ட் (reverend William Hirst) என்பவர் சென்னை ராஜதானி ஆளுநர் லார்ட் ஜார்ஜ் பிகோட் (President of the British East India Company, Madras Lord George Pigot) என்பவரது இல்லத்தில் ஆளுநர் பிகோட் மற்றும் அவரது நேரடி உதவியாளர் திரு.ஹால் (Mr.Hall) என்பவருடன் இந்த கடவை பார்த்து பதிவு செய்துள்ளார்.
ஆளுநர் லார்ட் ஜார்ஜ் பிகோட் 1719 –1777
Lord George Pigot
அதே நாளில் (1761) பிரெஞ்சு வானியல் ஆராய்சியாளர் Jean Guillaume Le Gentil என்பவர் பிரெஞ்சு இந்தியாவில் கப்பலில் இருந்து சில ஆராய்ச்சிகளை இந்த கடப்பின் போது செய்துள்ளார்.
Jean Guillaume Le Gentil 1725 – 1792
1874ல் ஓரிசா மாநிலம் புரியில் பதனி சமஸ்த சந்திரசேகர் (Pathani Samantha Chandrasekhar) என்ற ஒரிசா வான சாஸ்திர பண்டிதர் கணிதம் மற்றும் சில சுய ஆராய்ச்சி பொருட்களைக் கொண்டு இந்த நிகிழ்வை பதிவு செய்துள்ளார்.
பதனி சமஸ்த சந்திரசேகர் (1835-1904)
Pathani Samantha Chandrasekhar
இங்கு சென்னையில் 1874 மற்றும் 1882 வருடங்களில் சார்.நார்மன் இராபர்ட் போக்சன் (Sir. Right Honourable Norman Robert Pogson, KBE) என்ற ஆங்கில வானியல் ஆராய்ச்சியாளர் சென்னை நுங்கம்பாக்கத்தில் இவ்விருவருடங்களில்
சார் நார்மன் இராபர்ட் போக்சன் 1829 – 1891
(Sir. Right Honourable Norman Robert Pogson, KBE)
நடந்த வெள்ளி கோளின் கடப்பை ஆராய்ச்சி செய்தார். அவர் இதற்கு பயன்படுத்திய கருவிகள் கொடைக்கானல் சூரிய ஆராய்ச்சிக் கூடத்தில் இன்றும் பயன்பாட்டில் உள்ளன.
உத்திர பிரதேச மாநிலம் ரூகீ ( Rookee) என்ற இடத்தில் பிரான்சிஸ் தென்னாட் ( Lt. Gen James Francis Tennant) என்பவர் தனது சிறு சூரிய அரசி கூடத்தில் ஒரு 6 அங்குல தொலைநோக்கிக் கொண்டு இக்கடப்பை பதிவுசெய்துள்ளார்!
Lieutenant-General James Francis Tennant 1829 – 1915
பிரான்சிஸ் தென்னாட் 1829 – 1915
விசாகப்பட்டினத்தில் Ankitam Venkata Nursinga Row என்ற வானியல் ஆராய்சியாளர் தனது தாதா தோட்ட இல்லத்தில் இந்த நிகழ்வை பதிவுச் செய்துள்ளார்.
விசாகப்பட்டினம் தாதா தோட்ட இல்லம் சசுக்ர கடவு ஆராய்ச்சிக் குழு
வங்காள மாநிலம் முர்தபூர் என்ற இடத்தில் கல்கத்தா வானியல் ஆராய்ச்சி கூட குழுவினருடன் இத்தாலிய வானியல் ஆராய்சியாளர் பிட்ரோ தச்சினி (Pietro Tacchini ) இக்கடப்பை பதிவு செய்துள்ளார்!
தரங்கம்பாடி டச்சு கோட்டையில் சில டச்சு பதிரியளர்கள் 1761, 1874, 1882 அகிய வருடங்களில் நிகழ்ந்த இக்கடப்புகளை பதிவு செய்துள்ளனர்!
வெள்ளியின் சூரியக் கடப்பு மிக அபூர்வமாக அதாவது, 243 ஆண்டுகளுக்கு 4 முறை நடக்கிறது என்பதை முன்னரே பார்த்தோம். அதுவும், இதில் ஒரு ஒழுங்கு இருப்பதை நாம் காணலாம். இதற்கு முன் வந்த வெள்ளியின் சூரியக் கடப்பு 1631, 1639, 1761, 1769, 1874, 1882 மற்றும் 2004 ஆகும். இதில் உள்ள ஒழுங்கு என்னவெனில் 8 ஆண்டுகளுக்கு ஒருமுறையும், அதன் பின்னர் கிட்டத்தட்ட 121½ ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் சூரியக் கடப்பு நிகழ்வதை நீங்கள் காணலாம். அதே வரிசையில் 2004க்கு பிறகு ஜுன் 6. 2012 அதாவது 8 ஆண்டுகளுக்குப் பிறகு மேண்டும் இந்த வெள்ளியின் சூரியக் கடப்பு நிகழ்கிறது. எனவே இதற்கு அடுத்த கடப்பு டிசம்பர் 2117 ஆம் ஆண்டும் அதற்கு அடுத்தது டிசம்பர் 2125 ஆம் ஆண்டும் நடைப்பெறும்.
வெள்ளியின் சூரியக் கடப்பு ஏன் அடிக்கடி நிகழ்வதில்லை?
சூரியனை சுற்றும் அனைத்து கோள்களின் தளம் ஒன்றுப் போலவே இருப்பதில்லை. முக்கியமாக வெள்ளியின் சூரிய கடப்பு அடிக்கடி நிகழாததற்குக் காரணம், பூமியின் சுற்றுப்பாதையின் தளமும், வெள்ளியின் சுற்றுப்பாதையின் தளமும் ஒன்று போலில்லை. சுமார் 3.4 டிகிரி வேறுபடுகிறது. மேலும், சூரியனை வெள்ளி கோள் பூமியை விட வேகமாக சுற்றி வருகிறது. அதாவது, பூமி சூரியனை சுற்ற 365.25 நாட்கள் எடுத்துக் கொள்கிறது, ஆனால், வெள்ளியோ வெறும் 224.7 நாட்களில் சூரியனை சுற்றி வந்துவிடுகிறது. எனவே இவை மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் பொருந்தி வர எடுத்துக் கொள்ளும் காலம் ஒரு ஒழுங்கில் அமைகிறது.
அதாவது, சூரியனை பூமி சுற்றி வருவதற்கும், வெள்ளி சுற்றி வருவதற்கும் இடையேயான கால வேறுபாடு காரணமாக், பூமிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட பகுதியை 1.6 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெள்ளி கடந்து செல்கிறது. ஆனால், முன்பே சொன்னதுப் போல் பூமிக்கும், வெள்ளிக்கும் இடையேயான தள வேறுபாட்டின் காரணமாக வெள்ளியானது வடக்கிலோ, தெற்கிலோ கடந்து சென்று விடுவதால் சூரிய கடப்பு நிகழ்வதில்லை. ஆனாலும், சில நேரங்களில், வெள்ளியின் சுற்றுப் பாதை பூமியின் சுற்றுப் பாதையுள்ள தளத்தைக் கடக்கும் புள்ளிகளுக்கு அருகே சூரியன் மற்றும் பூமியை இணைக்கும் கோட்டை வெள்ளி கடந்து செல்வதால் வேள்ளியின் சூரிய கடப்பை நாம் காணலாம்.
வெள்ளிக் கோள் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி செல்லும் போது பூமியின் சுற்றுத் தளத்தைக் கடக்கும் புள்ளி ‘மேல் நோக்குப் புள்ளி”யாகவும் (ascending node), தெற்கு நோக்கிச் செல்லும் போது கடக்கும் புள்ளி “கீழ் நோக்குப் புள்ளி’யாகவும் (descending node) அமைகிறது. 2004-ல் நடந்த வெள்ளியின் சூரியக் கடப்பும், 2012-ல் நடக்கும் வெள்ளியின் சூரியக் கடப்பும் ’கீழ் நோக்குப் புள்ளி’யின் சூரியக் கடப்பாகும். இதற்கு முன் 1874 மற்றும் 1882-ல் நிகழ்ந்த வெள்ளியின் சூரியக் கடப்பு ‘மேல் நோக்கு புள்ளி’யின் சூரியக் கடப்பாகும்.
வெள்ளியின் சூரியக் கடப்பைக் காணக்கூடிய பகுதிகள்:
சீனாவின் பெரும்பாலான பகுதிகள், கிழக்கு ஆஸ்திரேலியா, கிழக்கு ரஷ்யா போன்ற பகுதிகளில் இதனை தொடக்கம் முதல் முடிவு வரைக் காணலாம். வடக்கு அமெரிக்காவில் 5ஆம் தேதி சூரிய மறைவின் போது காணாலாம். ஐரோப்பா, இஸ்ரேல், கிழக்கு ஆப்பிரிகா, தெற்கு ஆசியாவில் (இந்தியா) சூரிய உதயத்திலிருந்தே இதனைக் காணலாம். இந்தியாவில் காலை சூரிய உதயத்திலிருந்து பகல் 10.39 மணி வரை வெள்ளியின் சூரியக் கடப்பைக் காணலாம்.
பாதுகாப்பு உக்திகள்:
சூரியனை வெறும் கண்களால் பார்ப்பது மிகவும் ஆபத்தானது. அப்படியிருக்கையில் தொலைநோக்கி மூலமோ, பைனாகுலர் மூலமோ அல்லது வேறு ஏதாவது உருப்பெருக்கு கருவி மூலமோ சூரியனை நேரடியாகப் பார்க்கக் கூடாது. அப்படிச் செய்தால் கண்பார்வையை நிரந்தரமாக இழக்க நேரிடும். சூரியனை காண பிரத்யேகமாக வடிவமைக்கப் பட்ட தொலைநோக்கியையோ அல்லது அதற்காக உபயோகிக்கப்படும் கண்ணாடியையோ அணிந்துக் கொண்டு பார்ப்பது அவசியமாகும். எளிய வழியில் சூரியனைப் பாரிக்க அதனை நேரயாகப் பார்க்காமல் அதன் பிம்பத்தைப் பார்த்தல் வேண்டும். அனைவரும் இந்த வருட வெள்ளியின் சூரியக் கடப்பை காண்பீர்கள் என நம்புகிறேன். தொலைநோக்கியில் காண விரும்புபவர்கள் எனக்கு ஒரு மெயில் அனுப்பவும். நாங்கள் நடத்து பிரம்மாண்ட வெள்ளியின் சூரியக் கடப்பு நிகழ்ச்சியில் நேரில் கலந்துக் கொண்டு தொலைநோக்கியில் கண்டு மகிழுங்கள்.
வினோத் குமார்