தலைப்புகள்

  • அறிவியல்
  • அறிவியல் தொடர்
  • கட்டுரைகள்

Friday, May 11, 2012

வானியலின் வரலாறு – 2



        இரண்டு கிரேக்கர்கள் தனித்தனியாக ஒரே மாதிரியாக யோசித்து உண்மையைக் கண்டறிந்தார்கள் என்று முன்னரே கூறினேன். அவர்கள் மூன்று காரணங்களை வைத்து பூமி தட்டையாகவோ, வட்டமாகவோ அல்லது சிலிண்டராகவோ இருக்காது என்று கூறினர்.

  முதல் காரணம்: சந்திர கிரகணத்தின் போது சந்திரன் மீது விழும் நிழல் பூமியுடையதோ என்று அவர்கள் சந்தேகப்பட்டனர். அப்படி அது பூமியின் நிழலாக இருக்கும்பட்சத்தில் அது ஏன் எப்போதும் வட்டமாகவே விழ வேண்டும்?

       பூமி வட்டமாக இருந்தால், எல்லா நேரங்களிலும் நிழல் வட்டமாக விழாது. சில நேரங்களில் அது நீள்வட்டமாக விழுந்துவிடும். அல்லது பூமி ஒரு சிலிண்டர் வடிவமாக இருந்தாலும் அதன் நிழல் வட்டமாக விழாது. ஆனால் எப்போதுமே பூமியின் நிழல் வட்டமாக விழுவதை அவர்கள் கவனித்து வந்திருக்கிறார்கள்.

            ஏனெனில் கிரேக்கர்கள் பல வருடங்களாகவே கிரகணத்தை ஆராய்ந்திருந்தனர்.



 இரண்டாவதுக் காரணம்: கடலில் கப்பல் செல்லும் போது, அது தூரமாக சென்ற பின் முதலில் அதன் அடிப்பாகம் மறைந்து, பின்னர் அதன் மேல் பாகம் மறைவது!

   ஒருவேளை, பூமி தட்டையாக இருந்தால் அடிப்பாகமோ மேல்பாகமோ, 
எல்லாமே ஒரேடியாக மறையவோ அல்லது முழுவதும் மறையாமல் தெரியவோ வேண்டும். ஆனால் அப்படியில்லாமல், முதலில் அடிபாகமும் பின்னர் மேல் பாகமும் மறைய காரணம் என்னவாக இருக்கும் என்று யோசித்தனர்.

   மூன்றாவதுக் காரணம்: கிரேக்கர்கள் அப்போதே துருவ நட்சத்திரத்தை பற்றி அறிந்திருந்தனர். பூமத்திய ரேகை பகுதியை நோக்கிச் செல்லச் செல்ல துருவ நட்சத்திரம் வானில் கீழே இறங்கிவிடுவதையும், துருவப் பகுதி (வட துருவம்) நோக்கிச் செல்லச் செல்ல துருவ நட்சத்திரம் அவர்கள் தலைக்கு மேல் செல்வதையும் அவர்கள் கவனித்தார்கள்.

   பூமி தட்டையாக இருப்பின் இது சாத்தியமே இல்லை! பூமி தட்டையாக இருந்தால் நாம் எங்கு இருந்தாலும் துருவ நட்சத்திரம் ஒரே இடத்தில் தான் இருக்க வேண்டும்.



    மேற்சொன்ன மூன்று காரணங்களும், பூமி உருண்டையாக இருந்தால் தான் சாத்தியம். அது தட்டையாகவோ, வட்டமாகவோ அல்லது சிலிண்டராகவோ இருந்தால் சாத்தியமேயில்லை.

      எனவே இந்த மூன்றுக் காரணங்களை வைத்து அவர்கள் இந்த பூமி உருண்டை வடிவத்தில் தான் உள்ளது என்ற முடிவுக்கு வந்தனர்.

   அது சரி, யார் அந்த இரண்டு கிரேக்கர்கள்? என்று தானே கேட்குறீர்கள். ஃபைலோலாஸ் மற்றும் அரிஸ்டாட்டில் என்பவர்களே அவர்கள்.

ஃபைலோலாஸ்

      முன்னவர் கி.மு 450 மற்றும் பின்னவர் கி.மு. 380 ஆண்டுளைச் சார்ந்தவர்கள். இருவரும் தனித்தனியே இதுப் பற்றி கண்டறிந்தனரோ அல்லது ஃபைலோலாஸ் முன்மொழிந்து அதை அரிஸ்டாட்டில் வழிமொழிந்தாரோ.

ஆக மொத்தம் பூமி ஒரு கோளம் என்பது கண்டுப்பிடிக்கப்பட்டது.

        அரிஸ்டாட்டிலே சொன்னதற்குப் பிறகு பூமியின் வடிவம் பற்றி யாருக்கும் எந்த சந்தேகமும் அதன் பின் ஏற்படவேயில்லை. ஏனெனில் அரிஸ்டாட்டிலுக்கு அந்த காலத்தில் அவ்வளவு மவுசு!

அரிஸ்டாட்டில்

   ஆனால் இன்றும் கூட சில நாடுகளில் பூமி தட்டையானது என்று கூறி சில கிளப்புகள் உள்ளன. அதில் பலர் உறுப்பினர்களாகவும் உள்ளனர்.

   என்ன தான் விஞ்ஞானம் முன்னேறினாலும், நாம் பூமியை செயற்கைக் கோள் வழியாகப் படம் பிடித்துக் காட்டினாலும் அவர்கள் நம்புவதாக
இல்லை. அவர்களைப் பொறுத்தவரையில், அவர்கள் காணும் நிலப்பகுதி
தட்டையாக இருப்பதால் பூமி முழுவதுப் தட்டையாகவே இருக்கும் எனும்
அனுமானத்திற்கு அவர்கள் வந்து விட்டனர்.

    எது எப்படியோ, நமது முன்னோர்கள் பூமி உருண்டை என்று கண்டுப்பிடித்து விட்டார்களே அதுவேப் போதும்.

     பை த வே, பூமி உருண்டை என்பது இருக்கட்டும். அது எவ்வளவு வளைந்திருக்கிறது என்றுத் தெரியுமா?

      பூமியில் 8000 மீட்டர்கள் பயணம் செய்தால் சரியாக பூமி 5 மீட்டர் கீழிறங்கும். இதனைச் சொன்னவர் கலீலியோ.

பூமிப் பற்றி சரி, வானம் பற்றி கிரேக்கர்கள் என்ன நினைத்தார்கள்?

அடுத்த கட்டுரையில்!

                                         (இனி வானம் பற்றி அறிவோம்)
   
                                               வினோத் குமார்

Saturday, May 5, 2012

வானியலின் வரலாறு - 1


வானியலின் வரலாறு - 1
          உங்களின் சொந்த ஊர் எது? சென்னை? மதுரை? தூத்துக்குடி? 
ஆண்டிப்பட்டி? இதில் எதுவும் இல்லாமல் வேறொன்றா? கவலையில்லை. எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால், கேள்வி இப்போது அதுவல்ல. உங்கள் ஊரைத் தாண்டி நீங்கள் சென்றால் என்ன இருக்கும்? இதென்ன இப்படி ஒரு கேள்வி! என்றா கேட்கிறீர்கள். இருக்கட்டும் சொல்லுங்கள். உங்கள் ஊரைத் தாண்டிச் சென்றால் என்ன இருக்கும்? ஆண்டிப்பட்டியைத் தாண்டிச் சென்றால் ஒருவேளை பெரிய ஆலமரமும், ஐயனார் கோவிலும் இருக்கலாம். சென்னையின் ஒருப்பக்கம் கடல். சரி, கடலைத் தாண்டிப் போனால்!

        நீங்கள் எங்கு, எந்த ஊரில் இருந்தாலும் உங்கள் ஊரைத் தாண்டிச் 
சென்றால் இன்னொரு ஊர் இருக்கும் அல்லவா! பொறுமை. பொறுமை. என்னை அடிக்க வராதீர்கள். இதெல்லம் ஒரு கேள்வியா? என்று தானே கேட்கிறீர்கள். நான் கேட்பதற்கும் அர்த்தம் உண்டு. நான் கேட்ட கேள்வி உங்களுக்கு கேள்வியாகவேத் தோன்றாமல், உங்களை கேலி செய்வதாகத் தோன்றலாம். ஆனால், நான் கேட்ட கேள்வியை நீங்கள் வேறு யாரிடமாவது கேட்டிருந்தால் உங்களுக்குக் கிடைத்திருக்கும் பதில், அவர்கள் ஊரைத்தாண்டி எதுவும் இல்லை! என்பது தான். உங்கள் ஊர். அதன் பிறகு பெரியப் பள்ளம். இவ்வாறு தான் உங்களுக்கு பதில் கிடைத்திருக்கும். ஒருவேளை உங்கள் ஊர், அதன் பின் அடுத்த ஊர். அவ்வளவு தான். அதன் பிறகு எதுவுமில்லை. பெரியப் பள்ளம் தான். இவ்வாறு தான் கூறியிருப்பார்கள்.

   ஆனால் இந்த பதில் கிடைக்க நீங்கள் இப்போது பிறந்திருக்கக் கூடாது. 
நீங்கள் மனித சரித்திரத்தின் ஆரம்ப நாட்களில் பிறந்திருக்க வேண்டும். ஒருவேளை அப்படிப் நீங்கள் பிறந்து இந்தக் கேள்வியை கேட்டிருந்தால் நிச்சயம் நான் கூறிய பதில் தான் உங்களுக்குக் கிடைத்திருக்கும்.  உண்மையிலேயே சரித்திர காலத்தின் ஆரம்ப நாட்களில் பண்டைய மக்கள், அவர்கள் ஊரையும், அதற்கு பக்கத்து ஊரையும் தவிர எதுவுமில்லை என்றே நினைத்தனர். யாரவது அதையும் தாண்டி செல்வார்களானால் “தொபகடீர்” என்று விழுந்து விடுவார்கள் என்று கூறினர். பூமி என்பதே அவர்கள் ஊரும், பக்கத்து ஊரும் தான்! மேலும் இந்த பிரபஞ்சம் என்பதே இந்த பூமி மட்டும் தான். இதுதான் அவர்களின் கணிப்பு. அது சரி, பூமி என்பதே இந்த இரண்டு ஊர்கள் தான் என்றால் பூமியின் வடிவம்? தட்டைத் தான். வேறென்ன! இரண்டு  ஊர் மட்டுமே இருக்கும் பூமி வேறு எப்படி இருக்கும். ஆனால் மனிதன் அதோடு நிற்கவில்லை. காலம் தன் கையில் எல்லவற்றிற்கும் பதிலை வைத்திருந்தது.   

           மனித சரித்திரத்தில் நாகரீகம் பிறக்க ஆரம்பித்தது. மனிதன் 
கண்டுப்பிடித்த கண்டுப்பிடிப்பிலேயே சிறந்த ”சக்கரம்” கண்டுப்பிடிக்கப்பட்ட பிறகு அந்த எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்கியது. ஒருவேளை அவன் ஊருக்குப் பிறகு வேறு ஊர், அதன் பிறகு வேறு ஊர் என ஒரு நாலைந்து ஊர்கள் இருக்கும் என்று எண்ணனார்கள். ஆனால், பூமி அவ்வளவு தான். அது தட்டையானது. சில ஊருக்குப் பிறகு பெரியப் பள்ளம், இக்கருத்தில் எந்த மாற்றமும் ஏற்ப்படவில்லை. ஆனால் பண்டைய மனித சரித்திரத்தில் உயரிய நாகரீகத்தைக் கொண்ட கிரேக்கர்கள் ஒன்றும் சும்மா இருக்கவில்லை. பெரிய, பெரிய தத்துவஞானிகளைக் கொண்ட நாடு அது. அவர்களின் வித்தியாசச் சிந்தனையும், ஜியோமெட்ரி மீதான அவர்களின் ஆவலும், மோகமும் “தட்டை உலக” சித்தாந்தத்தை தவறு என உணர்த்தியது.


  கி.மு. 500-ல் வாழ்ந்த ”ஹெக்காடியஸ்” என்ற கிரேக்க அறிஞர் பூமி ஒரு 
மாதிரி “வட்டம்” என்றார். “தட்டை உலகத்திற்கு” ஒப்பிட்டால் “வட்ட உலகம்” எவ்வலவோ பரவாயில்லை தான். ஆனாலும் அது போதாதே. உண்மை இன்னும் தொலைவில் உள்ளதே. அதெல்லாம் சரி. பூமி ”தட்டை” அல்லது “வட்டம்” என்றே வைத்துக் கொள்வோம்.  ஆனால் பூமி எதன் மேல் உள்ளது? என்ற கேள்வியை எழுப்பினால், மிகவும் யோசித்து விட்டு “நாலு கம்பத்தின் மேல் பூமி நிற்கிறது” என்றனர். அந்த நாலு கம்பங்கள் எதன் மேல் நிற்கிறது என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் விழித்தனர். ஒருசிலர் நமது பூமி ஒரு பெரிய ஆமை மீது உள்ளது என்றனர். சிலர் ஆமை மீது நான்கு யானையும் அந்த யானைகள் மீது நமது தட்டை பூமியும் உள்ளது என்றனர்.

அனாக்ஸ்மாண்டர்

     ஆனால் அதோடு அவர்கள் நிற்கவில்லை. காலம் அதன் ரகசியங்களை மெல்ல அவிழ்க்க ஆரம்பித்ததும் அவர்களுக்கு உண்மை பிடிப்பட்டது.    கி.மு. 550-ல் வந்த “அனாக்ஸ்மாண்டர்” என்ற அறிஞர், “இல்லை, இல்லை, பூமி ஒரு மாதிரி சிலிண்டர்” என்றார். ஆனால் அதுவும் சரிப்பட்டு வரவில்லை. காலம் கடைசியில் கனிந்தது. உண்மையை அதன் பிறகு இரண்டு கிரேக்கர்கள் தனித்தியாக கண்டறிந்தனர்.
                                            (இன்னும் கண்டுப்பிடிப்போம்) 

                                                 வினோத் குமார்



தொலைப்பேசியில் ஒரு சிறுகதை


தொலைப்பேசியில் ஒரு சிறுகதை
       நேற்று ஒரு வாசகர் என்னைத் தொலைப்பேசியில் அழைத்து அவர் 
எழுதிய சிறுகதையை முழுவதையும் படித்துக் காட்டினார். வேறு வழியின்றி முழுவதையும் கேட்டேன். அவர் கதையில் நான்கு முறை கதவு திறக்கும் சப்தம் “சர்ர்ர்ர்ர்....” என்று வருகிறது. ஐந்து முறை கதாநாயகன் “சதக்.. சதக்...” என்று கத்தியால் கதாநாயகன் குத்துகிறான். கடைசியில் ஒருமுறை குத்து வாங்குகிறான். அதோடு கதை முடிகிறது. நான் சொல்ல வருவதெல்லாம் இதுதான். யார் வேண்டுமானாலும் சிறுகதை எழுதலாம். அது உங்கள் விருப்பம். ஆனால் அதற்கு முன் சில சிறந்த எழுத்தாளர்களின் சிறுகதைகளைப் படித்துவிட்டு வந்து எழுதுங்கள். அந்த வாசகருக்கு சில சிறந்த எழுத்தாளர்களின் கதைகளை எடுத்துச் சொன்னேன். புதுமைப் பித்தன், தி. ஜானகி ராமன், மௌனி என சிலரது சிறுகதைகளை விளக்கிக் கூறினேன். மேலும் எனது தலைவர் சுஜாதாவின் சிறுகதைகளைப் பற்றியும் விளக்கிச் சொன்னேன். சிறுகதைகளுள் இருக்கும் வகைகள், சிறுகதைகளுக்கும் விஞ்ஞான சிறுகதைகளுக்குமான வித்தியாசம் என அதையும் விளக்கினேன். ஆங்கிலத்தில் ஜெப்ரி ஆர்சர், ஆத்தர் சி கிளார்க், டக்ளஸ் ஆடம்ஸ் போன்றோரின் சிறுகதைகள் மற்றும் நாவல்களைப் பற்றியும் சொன்னேன். அவருக்கு முழுவதும் புரிந்ததா என்று தெரியாது, ஆனால் அவ்வளவு நேரம் தொலைப்பேசியில் பேசியதால் ஒரு பக்கம் காதில் ‘உய்ய்ய்ய்.....’ என்று சத்தம் இன்னுமும் கேட்டுத் தொலைகிறது. இதனால் நான் சொல்லவருவது  

1. சிறுகதை எழுதும் முன் குறைந்தது ஒரு சில சிறந்த சிறுகதைகளாவது படித்துவிடவும். பின்னர் அதன் பாதிப்பில்லாமல் எழுதுவது உங்கள் சாமர்த்தியம்.

2.அப்படியே நீங்கள் சிறுகதை எழுதினாலும் அதை எனக்கு தொலைப்பேசியில் தான் சொல்லுவேன் என்று அடம் பிடிக்காதீர்கள்.

3.  உங்கள் சிறுகதைகளை என்னுடைய மெயிலுக்கு அனுப்பவும்.
பொறுமையாக படித்துவிட்டு பதில் அனுப்புகிறேன். (triplicanesrv@yahoo.com)

4. தொலைப்பேசியில் பேசினால் உங்களுக்கு கால் சார்ஜும், எனக்கு டாக்டர் பீஸும் செலவாகும்.

அது சரி என்னை யாரோ கூப்பிடுவது போல வாசனை வருகிறதே, யாரது என்னைக் கூப்பிடுவது? வெறும் “உய்ய்ய்ய்....” என்று சத்தம் தானே கேட்கிறது.
                                               வினோத் குமார்
                                                     

ஹைக்கூ


ஹைக்கூ
                தமிழில் ஏதாவது மூன்று வார்த்தைகளில் மடக்கி கவிதை 
எழுத்தினாலே அதை ’ஹைக்கூ’ என்று பலர் நினைத்துவிடுகின்றனர். எனவே கண்ட குப்பைகளையும் ஹைக்கூ என்ற தலைப்பில் பார்க்க நேர்கிறது. அவ்வாறு எழுதுபவர்களுக்கு நான் சொல்வதெல்லாம் ”முதலில் உண்மையான ஹைக்கூவை படித்துவிட்டு வாரும். அதன் பின்னர் ஹைக்கூ எழுதுங்கள்” என்பதே. ஹைக்கூ என்பது மிகவும் ஆழ்ந்த அர்த்தமுடையது. அது தடாலென்று மின்னலடித்தார்ப்போல் தோன்றும். சாதாரணமாக  இதோ இன்னும் பத்து நிமிடத்தில் ஹைக்கூ எழுதுகிறேன் என்று சொல்லி ஒரு காகிதத்தை எடுத்து கிறுக்கி விட முடியாது. நன்கு விஷயம் தெரிந்தவர்கள் சொல்வதெல்லாம் இது தான். “நீங்கள் ஒருநாளும் ஹைக்கூ எழுத முடியாது. ஹைக்கூ அதுவாகவே உங்கள் மூலமாக தன்னை வெளிப்படித்திக் கொள்ளும்”. என்று. ஹைக்கூவின் இலக்கணமும், வரலாறும் தெரிந்த எனக்கு அது உண்மை என்றே தோன்றுகிறது. ஹைக்கூ என்பது ஜப்பானிய வார்த்தை. ஹைக்கூவே ஜப்பானிலிருந்து நமக்குக் கிடைத்த கொடை. நாம் தமிழில் மூன்று வரிகளில் மடக்கி எழுதுவதுப் போல் ஜப்பானிய மொழியில் எழுதுவதில்லை. அவர்கள் ஒரு மரத்தைப் போன்றோ அல்லது ஒரு கட்டிடத்டைப் போன்றோ தீட்டுகிறார்கள். ஒரு முழுவடிவமும் ஒரு ஹைக்கூ. ஹைக்கூவின் மிகப்பெரிய ஜாம்பவான்களான பாஷோ, யோஸோ பூஸான், கொபயாஷி எனப் பலர் தங்கள் மனதில் மின்னல் அடித்தார் போல் ஹைக்கூ தோன்றியதை பற்றி பதிவு செய்துள்ளனர். ஹைக்கூவில் மிகவும் முக்கியமாக கையாளப்படுவது, ஹைக்கூ படிப்பவரிடமே அதன் பொருளை விட்டுவிடுவது. பலர் நல்ல ஹைக்கூக்களை படித்துவிட்டு என்னிடம் “அப்படீனா?” என்று அதன் அர்த்தத்தை கேட்கிறார்கள். அவர்களுக்கு நான் சொல்ல விரும்புவதெல்லாம் அதற்கான அர்த்தத்தையும் அவர்களே யோசிக்க வேண்டும். ஒரு ஹைக்கூவைப் படித்தவுடன் உங்கள் மனதில் தோன்றும் எண்ணமே அந்த ஹைக்கூவின் அர்த்தம். ’ஹைக்கூ’ என்பது ஒரு கேள்வியல்ல. அதே நேரத்தில் அது ஒரு பதிலும் அல்ல. உங்கள் சிந்தனை என்னும் ஜலப்பரப்பில் எறியப்பட்ட ஒரு சிறிய கல் தான் ஹைக்கூ. இன்னும் விரிவாக சொல்ல வேண்டுமானால் ஹைக்கூ என்பது நீங்கள் உணரும் உணர்ச்சி அல்லது நீங்கள் சந்தித்த அனுபவத்தை அடுத்தவருக்கு தருவது. ஆனால் அவரும் நீங்கள் உணர்ந்தது போலவே அந்த அனுபவத்தை உணர்வார் என்றில்லை. அதனால் தான் ஹைக்கூவைப் படித்தவுடன் அதன் அர்த்தத்தை அவர்களையே உணரச் சொல்வது. முதன்முதலில் எனக்கு ’ஹைக்கூ’ பற்றிய விளக்கத்தைக் கொடுத்தவர் ’கவிக்கோ’ அப்துல் ரகுமான். புதுக் கல்லூரியில் அவரை சந்தித்தபோது ஒரு ஹைக்கூவிற்கு விளக்கத்தைக் கேட்டபோது ”அதனைப் படித்தவுடன் உங்கள் மனதில் என்ன எண்ணம் தோன்றுகிறதோ அதுதான் அதன் விளக்கம். யாரும் உங்களுக்கு விளக்குவது அல்ல ஹைக்கூ. நீங்களாகவே விளங்கிக்கொள்வது” என்றார். அதன் பிறகு எனக்கு ஹைக்கூ பற்றிய விரிவான விளக்கத்தைக் கொடுத்தவர் எனது தலைவர் சுஜாதா அவர்கள். இங்கும் அங்குமாக பல ஹைக்கூ பற்றியக் கட்டுரைகளை எழுதியதுடன், பல நல்ல ஹைக்கூக்களையும் அறிமுகம் செய்துள்ளார். சில உண்மையான மற்றும் சிறந்த ஹைக்கூகளை இப்போது பார்ப்போம்.
                                                             பழைய  கிணறு
தவளை  குதிக்கையில்
தண்ணீரில்  சப்தம்
-    பாஷோ

கொட்டும் மழைக்கு
வாயைத் திறந்து
இறந்த பூனை
-    மைக்கல் மக்லின்டால்

கடும் வெயிலில்
இன்னுமும் ஆடும்
காலி ஊஞ்சல்
 -    இஇ கம்மிங்ஸ்

திருடன்
மொட்டை மாடியில் மறைகிறான்
இரவின் குளிர்
-    யோஸோ பூஸான்

தண்ணீரில்
தவளையின் சப்தம்
'ப்ளக்'
-    பாஷோ

வீண் வீண்
பலத்த மழை
கடல்மேல்
-    ஜாக்கெரோவாக்
                          
                          நிலவொளியில்
                     ஒற்றைக் காலடிச்சுவடு
தூரத்தில் 
வழிப்போக்கன் நொண்டி

கடைசி ஹைக்கூ அடியேனுடையது. அது சரி நான் எழுதியது ஹைக்கூ தானா?


                                               வினோத் குமார்
                                        

Wednesday, May 2, 2012

தமிழின் எதிர்காலம்


தமிழின் எதிர்காலம்


     ”தமிழ் இனி மெல்லச்சாகும்” என்பதை என்னால் முழுவதுமாக ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ் தன் அடையாளத்தை மெல்ல மாற்றிக் கொள்ளும் என்று வேண்டுமானால் சொல்லுவேன். அது எப்படி தமிழ் செத்துப்போகும் என்று சொல்கிறீர்கள்? என்று கேட்டால், ”செத்துப்போகும் என்று யார் சொன்னது? மெல்லச்சாகும் என்று தானே இருக்கிறது” என்றார் என் நண்பர். ஒருவேளை நாம் ஆங்கிலம் முதலிய மற்ற மொழிகளை தமிழில் கலந்துவிட்டதால் இப்படி நினைக்கத் தோன்றுகிறது என்று கருதுகிறேன். ஆனால் கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், எல்லாவற்றிலும் ஒரு குறிப்பிட்ட அளவைத் தாண்டிய கலப்பு இருக்கத்தான் செய்கிறது. வெறும் நமது பாரம்பரியம், நமது கலாச்சாரத்தை சார்ந்ததைத் தவிர்த்து வேறெதுவும் உபயோகிக்கக் கூடாது எனில் button, pant, shirt என எதுவுமே இப்போது போடக்கூடாது. வெறும் வேஷ்டியும் துண்டும் தான். பாவம், பெண்களுக்கு ஜாக்கெட் கூட கிடையாது. பேருந்து, கார் போன்றவற்றை உபயோகிக்கக் கூடாது. மின்சாரத்தை நினைத்தேப் பார்க்கக்கூடாது. ஏனெனில் அதுவெல்லாம் நாம் கண்டுப்பிடித்தது அல்ல. மின்சாரம் உபயோகித்தப் பிறகு தமிழ்நாட்டின் பாரம்பரியம் போய்விட்டதென்றால் முதலில் அதன் உப்யோகத்தைத் தவிர்த்து விட்டு தமிழுக்கு வருவோம். நான் சொல்ல வருவதெல்லாம் அதை எப்படி தவிர்க்க முடியாதோ அதேப் போல் தான் இதையும். இதெல்லாம் காலத்தின் கட்டாயம்! இந்த மாற்றங்கள் வந்தே தீரும். இதில் மாற்றம் அடையாமல் அப்படியே இருப்பது, வெளிஉலகமே தெரியாமல் அமேசான் மழைக்காடுகளில் வாழ்பவர்கள் போலாகிவிடுவோம். நாம் மீண்டும் “நாதா!” என்றோ அல்லது பழையப் படத்தில் வருவதுப் போல் நீண்ட வசனத்தைப் போன்றோ பேசுவது சாத்தியமில்லை. என்னைப் பொருத்தவரை தமிழ் மொழி அழகாக இந்த வேற்று மொழிக் கலப்பை சமாளிக்கிறது. அது தூய பழந்தமிழோடு, ”சார், ஏன் ஆபிசுக்கு லேட்டு?” போன்ற ஆங்கிலச் சொற்களையும் அழகாக தன்னுடன் சேர்த்துக் கொள்கிறது. இதுவே அதன் அதிகப்படியான வெற்றி. இந்தியாவில் மக்கள் தொகையை 100லிருந்து 50 கோடியாக மாற்றுவது எப்படி சாத்தியமே இல்லையோ, அதேப்போல் தான் நாம் தமிழையும் பின்னோக்கி அழைத்துச் சென்று பழந்தமிழில் தான் பேசுவேன் என்று அடம்பிடிப்பதும். மக்கள் தொகையை 100லிருந்து 150ஆக மாறாமல் பார்த்துக் கொள்ளவதுதான் முக்கியம் என்பது போல, தமிழை இனியும் வேற்று மொழிகள் கலக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும். அதுதான் முக்கியம். அதற்கு பல புதிய சொற்களை நாம் தமிழிலேயே உருவாக்கவும் வேண்டும். அதுவும் எளிமையாக. தமிழ் தான் உலக மொழிகளிலேயே தொண்மையான மொழி, தமிழுக்குப் பிறகுதான் பிற மொழிகள் எல்லாம் என்றால், புதுமைப்பித்தன் சொல்வதுப் போல் “உலகின் முதல் குரங்கு தமிழ்க் குரங்கு தான்” என்பதையும் ஒப்புக்கொள்ளதான் வேண்டும். ஆனால் உண்மையிலேயே தமிழ் ஒரு அழகான மொழி. அது பல சிறப்பான குணாதிசியங்களை உள்ளடக்கியது. உதாரணத்திற்கு, தமிழ் மொழி ஜெர்மன் மொழியைப் போல் ஒரு ஒட்ட வைக்கும் “agglutinative” மொழி. உடம்படுமெய் விதிகளைப் பயன்படுத்தி “போகிறவர்களுக்கெல்லாமானதொரு” என்று ஒட்டவைத்துக் கொண்டே போக முடியும். பொதுவாக நமது பேச்சுத்தமிழில் தான் மற்ற மொழி வார்த்தைகளின் கலப்பு அதிகம். எழுதுவதிலோ, அரசியல் மேடைகளிலோ நாம் இன்னும் தமிழை பாதுகாத்துக் கொண்டுதான் இருக்கிறோம். எழுதும்போது, உரையாடலில் மட்டும் நமது பேச்சுத்தமிழ் வருவது யதார்த்தம். தமிழ்மொழி, செம்மொழியான முக்கியக் காரணங்ளே அதன் தொண்மையும், அந்த புறநானூறு, அகநானூறு கால வார்த்தைகளை இன்றும் பயன்படுத்துவது தான், அப்படி நீங்கள் தூயத் தமிழைத் தான் பயன்படுத்தவேண்டும் என்றால் ஒரு தமிழ்ப் பண்டிதரைப் பக்கத்திலேயே வைத்துக் கொள்ளுங்கள். அல்லது “நல்ல தமிழ் எழுதவேண்டுமா” என்ற ”பேராசிரியர் பரந்தாமனாரின்” புத்தகத்தை வாங்கிக் கொள்ளுங்கள். எளிய நடையில் இலக்கணத்தை யாவரும் அறியும் படி எழுதப்பட்டிருக்கும் புத்தகம் அது. உதாரணமாக “இந்த படம் எத்தனை அழகாக இருக்கிறது” என்பது தப்பு. “எவ்வளவு அழகு” என்று தான் சொல்லவேண்டும். எத்தனை என்பது எண்ணிக்கையைக் குறிப்பது. அழகு எண்ணிக்கையற்றது.  ”யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற சிந்தனை தமிழில் மட்டுமே இருக்கிறது என்று நினைப்பதே நமக்குப் பெருமை. ஆனால் தமிழை நாம், தமிழை அலட்சியப் படுத்துபவர்களிடம் மட்டுமில்லாமல், தமிழை மிகவும் நேசிப்பவர்களிடமிருந்தும் காப்பாற்ற வேண்டும்.   
                                                வினோத் குமார்