தமிழின்
எதிர்காலம்
”தமிழ் இனி மெல்லச்சாகும்” என்பதை என்னால்
முழுவதுமாக ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ் தன் அடையாளத்தை மெல்ல மாற்றிக் கொள்ளும்
என்று வேண்டுமானால் சொல்லுவேன். அது எப்படி தமிழ் செத்துப்போகும் என்று
சொல்கிறீர்கள்? என்று கேட்டால், ”செத்துப்போகும் என்று யார் சொன்னது? மெல்லச்சாகும்
என்று தானே இருக்கிறது” என்றார் என் நண்பர். ஒருவேளை நாம் ஆங்கிலம் முதலிய மற்ற
மொழிகளை தமிழில் கலந்துவிட்டதால் இப்படி நினைக்கத் தோன்றுகிறது என்று கருதுகிறேன்.
ஆனால் கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், எல்லாவற்றிலும் ஒரு குறிப்பிட்ட அளவைத் தாண்டிய
கலப்பு இருக்கத்தான் செய்கிறது. வெறும் நமது பாரம்பரியம், நமது கலாச்சாரத்தை
சார்ந்ததைத் தவிர்த்து வேறெதுவும் உபயோகிக்கக் கூடாது எனில் button, pant, shirt
என எதுவுமே இப்போது போடக்கூடாது. வெறும் வேஷ்டியும் துண்டும் தான். பாவம்,
பெண்களுக்கு ஜாக்கெட் கூட கிடையாது. பேருந்து, கார் போன்றவற்றை உபயோகிக்கக்
கூடாது. மின்சாரத்தை நினைத்தேப் பார்க்கக்கூடாது. ஏனெனில் அதுவெல்லாம் நாம்
கண்டுப்பிடித்தது அல்ல. மின்சாரம் உபயோகித்தப் பிறகு தமிழ்நாட்டின் பாரம்பரியம்
போய்விட்டதென்றால் முதலில் அதன் உப்யோகத்தைத் தவிர்த்து விட்டு தமிழுக்கு வருவோம்.
நான் சொல்ல வருவதெல்லாம் அதை எப்படி தவிர்க்க முடியாதோ அதேப் போல் தான் இதையும்.
இதெல்லாம் காலத்தின் கட்டாயம்! இந்த மாற்றங்கள் வந்தே தீரும். இதில் மாற்றம்
அடையாமல் அப்படியே இருப்பது, வெளிஉலகமே தெரியாமல் அமேசான் மழைக்காடுகளில்
வாழ்பவர்கள் போலாகிவிடுவோம். நாம் மீண்டும் “நாதா!” என்றோ அல்லது பழையப் படத்தில்
வருவதுப் போல் நீண்ட வசனத்தைப் போன்றோ பேசுவது சாத்தியமில்லை. என்னைப் பொருத்தவரை
தமிழ் மொழி அழகாக இந்த வேற்று மொழிக் கலப்பை சமாளிக்கிறது. அது தூய பழந்தமிழோடு, ”சார்,
ஏன் ஆபிசுக்கு லேட்டு?” போன்ற ஆங்கிலச் சொற்களையும் அழகாக தன்னுடன் சேர்த்துக்
கொள்கிறது. இதுவே அதன் அதிகப்படியான வெற்றி. இந்தியாவில் மக்கள் தொகையை
100லிருந்து 50 கோடியாக மாற்றுவது எப்படி சாத்தியமே இல்லையோ, அதேப்போல் தான் நாம்
தமிழையும் பின்னோக்கி அழைத்துச் சென்று பழந்தமிழில் தான் பேசுவேன் என்று
அடம்பிடிப்பதும். மக்கள் தொகையை 100லிருந்து 150ஆக மாறாமல் பார்த்துக்
கொள்ளவதுதான் முக்கியம் என்பது போல, தமிழை இனியும் வேற்று மொழிகள் கலக்காமல் பார்த்துக்
கொள்ளவேண்டும். அதுதான் முக்கியம். அதற்கு பல புதிய சொற்களை நாம் தமிழிலேயே
உருவாக்கவும் வேண்டும். அதுவும் எளிமையாக. தமிழ் தான் உலக மொழிகளிலேயே தொண்மையான
மொழி, தமிழுக்குப் பிறகுதான் பிற மொழிகள் எல்லாம் என்றால், புதுமைப்பித்தன்
சொல்வதுப் போல் “உலகின் முதல் குரங்கு தமிழ்க் குரங்கு தான்” என்பதையும்
ஒப்புக்கொள்ளதான் வேண்டும். ஆனால் உண்மையிலேயே தமிழ் ஒரு அழகான மொழி. அது பல
சிறப்பான குணாதிசியங்களை உள்ளடக்கியது. உதாரணத்திற்கு, தமிழ் மொழி ஜெர்மன்
மொழியைப் போல் ஒரு ஒட்ட வைக்கும் “agglutinative” மொழி. உடம்படுமெய் விதிகளைப்
பயன்படுத்தி “போகிறவர்களுக்கெல்லாமானதொரு” என்று ஒட்டவைத்துக் கொண்டே போக முடியும்.
பொதுவாக நமது பேச்சுத்தமிழில் தான் மற்ற மொழி வார்த்தைகளின் கலப்பு அதிகம்.
எழுதுவதிலோ, அரசியல் மேடைகளிலோ நாம் இன்னும் தமிழை பாதுகாத்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
எழுதும்போது, உரையாடலில் மட்டும் நமது பேச்சுத்தமிழ் வருவது யதார்த்தம்.
தமிழ்மொழி, செம்மொழியான முக்கியக் காரணங்ளே அதன் தொண்மையும், அந்த புறநானூறு,
அகநானூறு கால வார்த்தைகளை இன்றும் பயன்படுத்துவது தான், அப்படி நீங்கள் தூயத்
தமிழைத் தான் பயன்படுத்தவேண்டும் என்றால் ஒரு தமிழ்ப் பண்டிதரைப் பக்கத்திலேயே
வைத்துக் கொள்ளுங்கள். அல்லது “நல்ல தமிழ் எழுதவேண்டுமா” என்ற ”பேராசிரியர்
பரந்தாமனாரின்” புத்தகத்தை வாங்கிக் கொள்ளுங்கள். எளிய நடையில் இலக்கணத்தை யாவரும்
அறியும் படி எழுதப்பட்டிருக்கும் புத்தகம் அது. உதாரணமாக “இந்த படம் எத்தனை அழகாக
இருக்கிறது” என்பது தப்பு. “எவ்வளவு அழகு” என்று தான் சொல்லவேண்டும். எத்தனை
என்பது எண்ணிக்கையைக் குறிப்பது. அழகு எண்ணிக்கையற்றது. ”யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற சிந்தனை
தமிழில் மட்டுமே இருக்கிறது என்று நினைப்பதே நமக்குப் பெருமை. ஆனால் தமிழை நாம்,
தமிழை அலட்சியப் படுத்துபவர்களிடம் மட்டுமில்லாமல், தமிழை மிகவும்
நேசிப்பவர்களிடமிருந்தும் காப்பாற்ற வேண்டும்.
வினோத்
குமார்
No comments:
Post a Comment