தலைப்புகள்

  • அறிவியல்
  • அறிவியல் தொடர்
  • கட்டுரைகள்

Saturday, May 5, 2012

ஹைக்கூ


ஹைக்கூ
                தமிழில் ஏதாவது மூன்று வார்த்தைகளில் மடக்கி கவிதை 
எழுத்தினாலே அதை ’ஹைக்கூ’ என்று பலர் நினைத்துவிடுகின்றனர். எனவே கண்ட குப்பைகளையும் ஹைக்கூ என்ற தலைப்பில் பார்க்க நேர்கிறது. அவ்வாறு எழுதுபவர்களுக்கு நான் சொல்வதெல்லாம் ”முதலில் உண்மையான ஹைக்கூவை படித்துவிட்டு வாரும். அதன் பின்னர் ஹைக்கூ எழுதுங்கள்” என்பதே. ஹைக்கூ என்பது மிகவும் ஆழ்ந்த அர்த்தமுடையது. அது தடாலென்று மின்னலடித்தார்ப்போல் தோன்றும். சாதாரணமாக  இதோ இன்னும் பத்து நிமிடத்தில் ஹைக்கூ எழுதுகிறேன் என்று சொல்லி ஒரு காகிதத்தை எடுத்து கிறுக்கி விட முடியாது. நன்கு விஷயம் தெரிந்தவர்கள் சொல்வதெல்லாம் இது தான். “நீங்கள் ஒருநாளும் ஹைக்கூ எழுத முடியாது. ஹைக்கூ அதுவாகவே உங்கள் மூலமாக தன்னை வெளிப்படித்திக் கொள்ளும்”. என்று. ஹைக்கூவின் இலக்கணமும், வரலாறும் தெரிந்த எனக்கு அது உண்மை என்றே தோன்றுகிறது. ஹைக்கூ என்பது ஜப்பானிய வார்த்தை. ஹைக்கூவே ஜப்பானிலிருந்து நமக்குக் கிடைத்த கொடை. நாம் தமிழில் மூன்று வரிகளில் மடக்கி எழுதுவதுப் போல் ஜப்பானிய மொழியில் எழுதுவதில்லை. அவர்கள் ஒரு மரத்தைப் போன்றோ அல்லது ஒரு கட்டிடத்டைப் போன்றோ தீட்டுகிறார்கள். ஒரு முழுவடிவமும் ஒரு ஹைக்கூ. ஹைக்கூவின் மிகப்பெரிய ஜாம்பவான்களான பாஷோ, யோஸோ பூஸான், கொபயாஷி எனப் பலர் தங்கள் மனதில் மின்னல் அடித்தார் போல் ஹைக்கூ தோன்றியதை பற்றி பதிவு செய்துள்ளனர். ஹைக்கூவில் மிகவும் முக்கியமாக கையாளப்படுவது, ஹைக்கூ படிப்பவரிடமே அதன் பொருளை விட்டுவிடுவது. பலர் நல்ல ஹைக்கூக்களை படித்துவிட்டு என்னிடம் “அப்படீனா?” என்று அதன் அர்த்தத்தை கேட்கிறார்கள். அவர்களுக்கு நான் சொல்ல விரும்புவதெல்லாம் அதற்கான அர்த்தத்தையும் அவர்களே யோசிக்க வேண்டும். ஒரு ஹைக்கூவைப் படித்தவுடன் உங்கள் மனதில் தோன்றும் எண்ணமே அந்த ஹைக்கூவின் அர்த்தம். ’ஹைக்கூ’ என்பது ஒரு கேள்வியல்ல. அதே நேரத்தில் அது ஒரு பதிலும் அல்ல. உங்கள் சிந்தனை என்னும் ஜலப்பரப்பில் எறியப்பட்ட ஒரு சிறிய கல் தான் ஹைக்கூ. இன்னும் விரிவாக சொல்ல வேண்டுமானால் ஹைக்கூ என்பது நீங்கள் உணரும் உணர்ச்சி அல்லது நீங்கள் சந்தித்த அனுபவத்தை அடுத்தவருக்கு தருவது. ஆனால் அவரும் நீங்கள் உணர்ந்தது போலவே அந்த அனுபவத்தை உணர்வார் என்றில்லை. அதனால் தான் ஹைக்கூவைப் படித்தவுடன் அதன் அர்த்தத்தை அவர்களையே உணரச் சொல்வது. முதன்முதலில் எனக்கு ’ஹைக்கூ’ பற்றிய விளக்கத்தைக் கொடுத்தவர் ’கவிக்கோ’ அப்துல் ரகுமான். புதுக் கல்லூரியில் அவரை சந்தித்தபோது ஒரு ஹைக்கூவிற்கு விளக்கத்தைக் கேட்டபோது ”அதனைப் படித்தவுடன் உங்கள் மனதில் என்ன எண்ணம் தோன்றுகிறதோ அதுதான் அதன் விளக்கம். யாரும் உங்களுக்கு விளக்குவது அல்ல ஹைக்கூ. நீங்களாகவே விளங்கிக்கொள்வது” என்றார். அதன் பிறகு எனக்கு ஹைக்கூ பற்றிய விரிவான விளக்கத்தைக் கொடுத்தவர் எனது தலைவர் சுஜாதா அவர்கள். இங்கும் அங்குமாக பல ஹைக்கூ பற்றியக் கட்டுரைகளை எழுதியதுடன், பல நல்ல ஹைக்கூக்களையும் அறிமுகம் செய்துள்ளார். சில உண்மையான மற்றும் சிறந்த ஹைக்கூகளை இப்போது பார்ப்போம்.
                                                             பழைய  கிணறு
தவளை  குதிக்கையில்
தண்ணீரில்  சப்தம்
-    பாஷோ

கொட்டும் மழைக்கு
வாயைத் திறந்து
இறந்த பூனை
-    மைக்கல் மக்லின்டால்

கடும் வெயிலில்
இன்னுமும் ஆடும்
காலி ஊஞ்சல்
 -    இஇ கம்மிங்ஸ்

திருடன்
மொட்டை மாடியில் மறைகிறான்
இரவின் குளிர்
-    யோஸோ பூஸான்

தண்ணீரில்
தவளையின் சப்தம்
'ப்ளக்'
-    பாஷோ

வீண் வீண்
பலத்த மழை
கடல்மேல்
-    ஜாக்கெரோவாக்
                          
                          நிலவொளியில்
                     ஒற்றைக் காலடிச்சுவடு
தூரத்தில் 
வழிப்போக்கன் நொண்டி

கடைசி ஹைக்கூ அடியேனுடையது. அது சரி நான் எழுதியது ஹைக்கூ தானா?


                                               வினோத் குமார்
                                        

No comments: