தலைப்புகள்

  • அறிவியல்
  • அறிவியல் தொடர்
  • கட்டுரைகள்

Saturday, May 5, 2012

தொலைப்பேசியில் ஒரு சிறுகதை


தொலைப்பேசியில் ஒரு சிறுகதை
       நேற்று ஒரு வாசகர் என்னைத் தொலைப்பேசியில் அழைத்து அவர் 
எழுதிய சிறுகதையை முழுவதையும் படித்துக் காட்டினார். வேறு வழியின்றி முழுவதையும் கேட்டேன். அவர் கதையில் நான்கு முறை கதவு திறக்கும் சப்தம் “சர்ர்ர்ர்ர்....” என்று வருகிறது. ஐந்து முறை கதாநாயகன் “சதக்.. சதக்...” என்று கத்தியால் கதாநாயகன் குத்துகிறான். கடைசியில் ஒருமுறை குத்து வாங்குகிறான். அதோடு கதை முடிகிறது. நான் சொல்ல வருவதெல்லாம் இதுதான். யார் வேண்டுமானாலும் சிறுகதை எழுதலாம். அது உங்கள் விருப்பம். ஆனால் அதற்கு முன் சில சிறந்த எழுத்தாளர்களின் சிறுகதைகளைப் படித்துவிட்டு வந்து எழுதுங்கள். அந்த வாசகருக்கு சில சிறந்த எழுத்தாளர்களின் கதைகளை எடுத்துச் சொன்னேன். புதுமைப் பித்தன், தி. ஜானகி ராமன், மௌனி என சிலரது சிறுகதைகளை விளக்கிக் கூறினேன். மேலும் எனது தலைவர் சுஜாதாவின் சிறுகதைகளைப் பற்றியும் விளக்கிச் சொன்னேன். சிறுகதைகளுள் இருக்கும் வகைகள், சிறுகதைகளுக்கும் விஞ்ஞான சிறுகதைகளுக்குமான வித்தியாசம் என அதையும் விளக்கினேன். ஆங்கிலத்தில் ஜெப்ரி ஆர்சர், ஆத்தர் சி கிளார்க், டக்ளஸ் ஆடம்ஸ் போன்றோரின் சிறுகதைகள் மற்றும் நாவல்களைப் பற்றியும் சொன்னேன். அவருக்கு முழுவதும் புரிந்ததா என்று தெரியாது, ஆனால் அவ்வளவு நேரம் தொலைப்பேசியில் பேசியதால் ஒரு பக்கம் காதில் ‘உய்ய்ய்ய்.....’ என்று சத்தம் இன்னுமும் கேட்டுத் தொலைகிறது. இதனால் நான் சொல்லவருவது  

1. சிறுகதை எழுதும் முன் குறைந்தது ஒரு சில சிறந்த சிறுகதைகளாவது படித்துவிடவும். பின்னர் அதன் பாதிப்பில்லாமல் எழுதுவது உங்கள் சாமர்த்தியம்.

2.அப்படியே நீங்கள் சிறுகதை எழுதினாலும் அதை எனக்கு தொலைப்பேசியில் தான் சொல்லுவேன் என்று அடம் பிடிக்காதீர்கள்.

3.  உங்கள் சிறுகதைகளை என்னுடைய மெயிலுக்கு அனுப்பவும்.
பொறுமையாக படித்துவிட்டு பதில் அனுப்புகிறேன். (triplicanesrv@yahoo.com)

4. தொலைப்பேசியில் பேசினால் உங்களுக்கு கால் சார்ஜும், எனக்கு டாக்டர் பீஸும் செலவாகும்.

அது சரி என்னை யாரோ கூப்பிடுவது போல வாசனை வருகிறதே, யாரது என்னைக் கூப்பிடுவது? வெறும் “உய்ய்ய்ய்....” என்று சத்தம் தானே கேட்கிறது.
                                               வினோத் குமார்
                                                     

No comments: