தலைப்புகள்

  • அறிவியல்
  • அறிவியல் தொடர்
  • கட்டுரைகள்

Sunday, March 6, 2016

பிரபஞ்ச வானியல் கழகம் - வானியல் கழகத்தில் சினிமா நடிகை சொப்பண சுந்தரி


பிரபஞ்ச வானியல் கழகம்

     இந்த தொடர்கதை யார் மனதையும்  புண்படுத்த அல்ல. வெறும் சிரித்து மகிழ மட்டுமே. இந்த கதைகள் விசேஷமாக என்னுடைய வானியல் கழக நண்பர்களுக்காக எழுதப்படுவது. இந்த தொடர்கதையை எழுத காரணமாக இருந்த டாக்டர். ஆனந்த் அவர்களுக்கு நன்றி. என்னுடைய குருநாதர் திரு.ரமேஷ்குமார் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். மேலும் என்னுடைய வானியல் நண்பர்கள் குறிப்பாக விஜயகுமார், முரளிதரன், சர்வேஷ், பாலாஜி என அனைவருக்கும் நன்றிகள்.

     இது ஒரு விஞ்ஞான கதை வரிசையில் எழுதப்பட்ட தொர்கதை. எனவே இதில் பிரபஞ்சத்தின் எந்த மூலை முடுக்கிலிருந்தும் கதாப்பாத்திரங்கள் வரலாம். சில இடங்களில் அறிவியல் விதிகள் மீறப்படலாம். பெரும்பாலும் எங்கள் வானியல் கழக உறுப்பினர்களுக்கு மட்டுமே புரியுமாறும், அவர்கள் ரசிக்குமாறும் எழுதப்பட்டிருக்கிறது. பிரபஞ்சத்தின் ஒவ்வொரு நட்சத்திரத்திலும் வாழும் ஒவ்வொருவர் வானியல் கழகத்தில் உறுப்பினர்களாக இருக்கும் போது அங்கு நடக்கும் வேடிக்கையான சாம்பவங்களே இத்தொடர்கதை. தங்களுடைய ஒத்துழைப்பை எதிர்நோக்கும் உங்கள் வினோத் குமார். இனி கதைக்குள் செல்வோம்.

1.   வானியல் கழகத்தில் சினிமா நடிகை சொப்பண சுந்தரி


     அந்த பிரபஞ்ச வானியல் கூட்டம் எப்போதும் போல இம்முறையும் ஆன்ட்ரோமீடா கேலக்ஸியில் நடக்கவிருந்தது. எப்போதும் போலவே பிரபஞ்சத்தின் பல்வேறு பகுதியிலிருந்து அதன் உறுப்பினர்கள் அதில் பங்கேற்பதற்காக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கான எந்த முன்னேற்பாடும் அந்த ஆன்ட்ரோமீடா கோளரங்கத்தில் செய்யப்படவில்லை என்பதை அங்கு வரும் உறுப்பினர்கள் தெரிந்து கொள்ளப் போகிறார்கள்.

கூட்டத்திற்கு நேரமாகிவிட்டதோ என்ற பரபரப்பில் அவசர அவசரமாக கூட்டம் நடக்கும் அறைக்குச் சென்றார் அதன் ஒரு உறுப்பினரான முரளிதரன். இவர் பிடல்கியூஸ் எனும் நட்சத்திரத்திலிருந்து வருபவர். அந்த நட்சத்திரம் ஒரு சிகப்பு அரக்கன் வகையைச் சேர்ந்தது. அரக்கன் என்றவுடன் அதில் வாழ்பவர்கள் அனைவரும் முரடற்கள் என்று எண்ணிவிட வேண்டாம். ஒவ்வொரு நட்சத்திரமும் அதன் இளமை காலத்தில் நீல நிறமாகவும் வயதாக வயதாக சிகப்பு நிறத்திற்கும் மாறும். மேலும் வயதாக வயதாக அது பெரிதாக உப்பிக் கொண்டே செல்வதால் அதற்கு சிகப்பு அரக்கன் என்று பெயர். நான் சொன்னதிலிருந்தே தெரிந்திருக்கும், அந்த முரளிதரனும் வயதானவர் தான். ஆனால் இதை யாரும் சத்தம் போட்டு படித்துவிடதீர்கள். ஏனெனில் அவருக்கு வயதாகிவிட்டது என்று யாராவது அவர் காதுபட கூறினால் கோபம் வருவதுடன்  அவருக்கு அது பிடிப்பதுமில்லை.

     நல்ல சிகப்பான மேனியுடன் மற்ற இளைய நட்சத்திரங்களிலிருந்து வரும் இளைஞர்களைப் போல் இவரும் பல மேக்கப் மற்றும் ஆடைகளை உடுத்திக் கொண்டாலும் இவரை மற்றவர்கள்  பார்த்தவுடன் சொல்லும் முதல் வார்த்தையே ‘அங்கிள்’ தான். அதனால் தானோ என்னவோ அவருக்கு உடனடியாக முகம் வாடியுடுவதுடன், மேற்கொண்டு எதையும் பேசாமல் தவிர்த்து விடுவார்.

     அவசர அவசரமாக உள்ளே சென்றவருக்கு ஏமாற்றம். அங்கே அவருக்கு முன்பாக வெறும் நான்கு நபர்கள் மட்டுமே அமர்ந்திருந்தனர். ஒருவேளை இன்றைய கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டு விட்டதா? என்ற எண்ணத்துடன் அமைதியாக ஒரு மூலையில் அமர்ந்தார் முரளிதரன். அந்த நால்வரையும் அதற்குமுன்  பார்ததிருந்தாலும் அவர்களுடன் அதுவரை அவர் பேசியதில்லை. அந்த நால்வரும் அவர்களுக்குள் ஏதோ முக்கியமாக பேசிக் கொள்கிறார்கள் என்ற எண்ணத்தில் அவர் ஒதுங்கிவிட்டார்.

     அந்த நால்வரில் ஒருவர் விஜயகுமார். ஒரியன் நெபுலாவிலிருந்து வருபவர். அது ஒரு நடுத்தர வயது நெபுலா. அது ஹன்ட்டர் கான்ஸ்ட்டலேஷனில் காணப்படும். பிடல்கியூஸ் எனும் திருவாதிரை நட்சத்திரமும் அதே கான்ஸ்ட்டவேஷனில் இருப்பதால் முரளிதரனும் விஜயகுமாரும் பக்கத்து வீட்டுக்காரர்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம். அவருக்கு அருகில் அமர்ந்திருக்கும் மூவரும் சர்வேஷ், பாலாஜி மற்றும் வினோத் குமார். இவர்கள் பிரபஞ்சத்தில் எந்தவித முக்கியத்துவமுமில்லாத சூரிய குடும்பம் எனும் பகுதியில் குறிப்பாக அஸ்ட்ராய்ட் பெல்ட்டிலிருக்கும் மூன்று சிறிய கற்கள். எனவே அவர்கள் மூவரும் வயதில் சிறியவர்கள் என்பதை நான் சொல்லி தான் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற அவசியமில்லை.

அந்த நால்வரும் முரளிதரன் அங்கே ஒரு மூலையில் அமர்ந்திருப்பதை கூட கவனிக்காமல் பேசிக் கொண்டிருக்கையில் விஜயகுமார் முரளிதரனின் பக்கம் திரும்பினார்.

"என்ன சார் வேற யாரு வரல போலயிருக்கே” என்று விஜயகுமார் சொல்ல முரளிதரனும் அவருடைய மவுனத்தை கலைத்தார்.

"அதான் எனக்கும் ஒன்னும் புரியலை. ஏன் யாரும் வரல” என்று கேட்டுக் கொண்டே அந்த நால்வரின்  அருகில் சென்று அமர்ந்தார்.

பார்ப்பதற்கு மிகவும் சீரியசான முகத்துடன் முரளிதரன் தோன்றிய காரணத்தினால் அவரிடம் மற்ற மூன்று இளைஞர்களும் எதுவும் பேசாமலேயே இருந்தனர். அந்த மூவரும் தங்கள் மனதிற்குள்ளாகவே முரளிதரனைப் பற்றி அறிவியலில் தீவிரமான ஆவலிருக்கும் உறுப்பினர் என்ற எண்ணத்தை கொண்டனர்.

"என்ன சார், போன தடவ கூட்டத்திற்கும் யாரும் பெரிசா வரலை. இந்த தடவையும் வரலைனா எப்படி?”

"வானியல் மேல இவங்களுக்கு எல்லாம் அவ்வளவு தான் ஆர்வம் போலயிருக்கு. அதனால தான் யாரும் பெரிசா வரதில்லை.” என்று விஜயகுமாருக்கு பதிலளித்தார் முரளிதரன்.

"இதுக்கு நாம ஏதாவது பண்ண வேண்டாமா? ஒவ்வொருத்தரும்  இதுக்காக எவ்வளவு தூரத்துல இருந்து இங்க வர்றோம். ஒவ்வொரு தடவையும் இப்படியே நடந்தா எப்படி?” என்று வினோத் கூற முரளிரன் இந்த இளைஞர்கள் யார்? என்ற தோரணையில் அவர்களைப் பார்த்தார். பின்னர் ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து கொண்டு அந்த அறையை விட்டு பேசிக் கொண்டே வெளியேறினார்கள்.

“இவங்களை வரவைக்க என்ன தான் பண்ணுறது?” என்று விஜயகுமார் கேட்க, சர்வேஷ் “ஏதாவது பெரிய சயின்டிஸ்ட்ட கூட்டிட்டு வந்து பேச சொல்லலாம்”.

வினோத் "அதெல்லாம் சரியா வராது. நம்ப ஆளுங்களுக்கு சயின்ஸ்னாலே அலர்ஜியா இருக்கே”.

விஜயகுமார் "நம்ப உறுப்பினர்கள் மட்டுமில்ல. பப்ளிக்குக்கும் அஸ்ட்ரானமி பத்தி அவர்னஸ் வர்ற மாதிரி ஏதாவது பண்ணனும்".

வினோத் "வேணும்னா ஒரு டிரிப் போட்டு கசிரோப்பியா, டெனபோலானு கூட்டிட்டு போலாம். ஒரு சோலார் டே டிரிப் தான்.”

பாலாஜி “ஆனா அதுக்கு யாரு செலவு பண்ணுவா”

வினோத் “யார் யார் வராங்களோ அவங்க தான் பண்ணனும்"

விஜயகுமார் "சுத்தம். அப்படினா யாரும் வரமாட்டாங்க."

முரளிதரன் சற்று யோசித்து விட்டு “என்கிட்ட அருமையான ஐடியா இருக்கு” என்றார்.

வினோத் "முதல்ல ஐடியா என்னனு சொல்லுங்க. அது அருமையா இல்லையானு நாங்க சொல்லுறோம்”

மற்றவர்கள் முரளிதரனை அங்கிள் என்று சொல்லாத வரை அவருக்கு சந்தோஷம் தான்.

முரளிதரன் “நான் வேணும்னா ஏதாவது கிரிக்கெட் ப்ளேயரை  கூட்டிட்டு வரேன்” என்றவர், "ஆமா உங்க நடசத்திரத்துல எல்லாம் கிரிக்கெட் விளையாடுறாங்களா? கிரிக்கெட்னா என்னனு தெரியுமா?”

பாலாஜி "என்ன அங்கிள் இப்படி சொல்லிட்டீங்க. கிரிக்கெட் ஒரு யூனிவெர்சல் கேம். நானே அதுல எத்தனை கோல் அடிச்சியிருக்கேன் தெரியுமா?” என்றவுடன் அனைவரும் சிரிக்க, முரளிதரன் மட்டும் கொஞ்சம் கடுப்பானார். அதற்கு பாலாஜி தன்னை அங்கிள் என்று அழைத்ததும் ஒரு காரணம்.

முரளிதரன் “எனக்கு சச்சின் ஹன்ரட்கரை நல்லா தெரியும். அவர் கூட நான் போட்டோ எல்லாம் எடுத்து இருக்கேன். அவரை வேணும்னா கூப்பிடலாம்".

சர்வேஷ் "ஆனா நாங்க சச்சின் டெண்டுல்கரை தானே கேள்விப்பட்டிருக்கோம். பூமியில அவர் விளையாடுறாரு."

முரளிதரன் “ஓ, அப்படியா? ஆனா நான் அவரையெல்லாம் கேள்விபட்டதில்லை. எனக்கு சச்சின் ஹன்ரட்கரை தான் தெரியும். அவர் சேப்பாக்கம்  ஸ்டேடியம்ல விளையாட வந்தபோ எடுத்த போட்போ".

வினோத் “சேப்பாக்கம் ஸ்டேடியம் பூமியில தானே இருக்கு. நீங்க பூமிக்கு போயிருக்கீங்களா?”

முரளிதரன் “ஏன் சேப்பாக்கம் ஸ்டேடியம் பூமியில மட்டும் தான் இருக்கனுமா? எங்க பிடல்கியூஸ் நட்சத்திரத்துல இருக்கக்கூடாதா?”

பாலாஜி “அதெப்படி இருக்க முடியும்?”

முரளிதரன்  “ஏன் முடியாது. எங்க பிடல்கியூஸ் நட்சத்திரத்துல மெரினா பிச்சுக்கு பக்கத்துல அந்த ஸ்டேடியம் இருக்கு”

சர்வேஷ் “இந்த யூனிவர்ஸ்ல ஒரே இடம் பல நட்சத்திரத்துத்துலயும் இருக்க வாய்ப்பு இருக்கு.”

வினோத் "அப்படினா இன்னொரு முரளிதரன் அங்கிள் இருக்கவும் வாய்ப்பு இருக்கா?”

சர்வேஷ் "ஏன் இல்லாம. கண்டிப்பா இருப்பாரு. அவரு பூமியில பள்ளிக்கரணையில கூட இருக்கலாம். ஏன் நம்ம விஜயகுமார் அங்கிள் மாதிரி இன்னொருத்தர் கே.கே.நகர்ல கூட இருக்கலாம். இன்னொரு வினோத் திருவல்லிகேணியில இப்போ நாம பேசிட்டு இருக்குறதையே தொடர்கதையா எழுதிட்டு இருக்கலாம்.”

முரளிதரன் "அப்போ என்னை மாதிரி இன்னொருத்தன் இருந்தா அவனுக்கும் ஒரே ஒரு பொண்டாட்டி தான் இங்குமா?”

வினோத் “அவருக்கு எத்தனை பொண்டாட்டி இருந்தா என்ன? அவங்களை நீங்க என்ன பண்ணமுடியும்?”

முரளிதரன் "வெறும் சந்தோஷமாவது பட்டுகலாமே.”

சர்வேஷ் "ஆர்வ கோளாறுல உங்களை மாதிரி வேற யாரையாவது பார்த்து அவங்களை தொட்டுட போறீங்க. அதுக்கு அப்புறம் நீங்க வேற யாரையும் தொட முடியாது.”

முரளிதரன் "ஏன் சர்வேஷ். அப்படி தொட்டா தீட்டா?”

பாலாஜி "தீட்டு இல்ல. அதோட நீங்க காலி. உங்களை மாதிரியே இருக்குற அந்த இன்னொருத்தர் உங்களோட ஆன்டி மாட்டர். அதனால ரெண்டு பேரும் சேர்ந்து வெடிச்சி பஸ்பமாகிடுவீங்க.”

முரளிதரன் "என்னது? ஆன்ட்டிய மேட்டர் பண்ணணுமா?”

வினோத் "ஐயோ, ஆன்ட்டி மேட்டர்னா அது இல்ல. சரி, அது எதுக்கு இப்போ. நம்ப வானியல் கழகத்துக்கு ஆள் சேர்க்குறதுக்கு ஐடியா குடுங்க.”

முரளிதரன் "என்னபா. ஆன்ட்டிய மேட்டர் பண்ணணும்னு சொல்லுறீங்க அப்புறம் வேணானு சொல்லுறீங்க. சரி என்கிட்ட இன்னொரு ஐடியா இருக்கு.”

வினோத் "ஆன்ட்டிய மேட்டர் பண்ணுறதுக்கா”

முரளிதரன் "அதுக்கு நிறைய ஐடியா இருக்கு. ஆனா நம்ப க்ளப்புக்கு ஆள் சேர்க்க அது மாதிரியே ஒரு நல்ல ஐடியா இருக்கு”

விஜயகுமார் "என்ன ஐடியா?”

முரளிதரன் "ஏதாவது கவர்ச்சி நடிகையை நம்ப மீட்டிங்குக்கு கூப்பிடுவோம். அப்புறம் பாருங்க. கும்பல் அல்லும்.”

சர்வேஷ் "எனக்கு இந்த ஐடியாவே பிடிக்கலை. வானியலுக்கும் நடிகைகளுக்கும் என்ன சம்பந்தம்.”

பாலாஜி “அதுவும் கவர்ச்சி நடிகை"

முரளிதரன் "எனக்கு தெரிஞ்ச கவர்ச்சி நடிகை சொப்பண சுந்தரி இருக்கா. அவளை நான் அரேஞ் பண்ணுறேன். எல்லா செலவையும் நான் பார்த்துகிறேன். அடுத்த மீட்டிங்குல எவ்வளவு கும்பல் வருதுனு மட்டும் பாருங்க.”

வினோத் "செப்பண சுந்தரி வேண்டா அங்கிள். அவளுக்கு கல்யாணம் ஆகிடுச்சு.”

முரளிதரன் “இப்படி பேசினா எனக்கு கெட்ட கோபம் வரும். சரியா தெரியாம பேசாத. இன்னும் சொப்பண சுந்தரி அம்மாவுக்கே கல்யாணம் ஆகலை. நான் சொல்லுறதை கேளுங்க. இந்த ஐடியா தான் சரி”

"என்னவோ பண்ணுங்க. நமக்கு அஸ்ட்ரானமி பாபுலர் ஆனா போதும்.” என்று கூறி அனைவரும் அங்கிருந்து கலைந்தனர்.

 அடுத்த மீட்டிங்கும் வந்தது. அவர்கள் எதிர்பார்த்தது போலவே அந்த பெரிய அரங்கம் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. கூட்டத்தை கட்டுபடுத்த பிரபஞ்ச போலீஸ்காரர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அந்த கூட்டத்தில் கலந்து கொள்ள அது வரை கூட்டத்திற்கே வராத பல உறுப்பினர்கள் வந்திருந்தனர். மேலும் கூட்டத்தில் கலந்து கொள்பவர்களிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டு அதற்கு சரியாக பதில் சொல்வோருக்கு சொப்பண சுந்தரியுடன் உணவருந்தும் வாய்ப்பும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கேள்வி மிகவும் எளிமையானது. ’சொப்பண சுந்தரியை இப்போ யார் வெச்சிட்டு இருக்குறது?’ என்பதே அது.

 கூட்டம் கட்டுக்கடங்காமல் செல்லவே முரளிதரனும் காவல்துறையுடன் சேர்ந்து கூட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர முயற்சி எடுத்தார். அதற்கு காரணம் அவர் பிடல்கியூஸ் நட்சத்திரத்தில் காவல்துறையில் பணியாற்றியதாக அவரே கூறிக் கொண்டது. அதற்கான ஆதாரமாக வினோத் முரளிதரனிடம் ஐ.டி கார்டை கேட்ட போது ஏதேதோ சொல்லி அங்கிருந்து நகர்ந்தாலும்  அந்த கூட்டம் முடியும் வரை அனைவரித்திலும் தன்னையும் ஒரு போலீஸ்காரர் என்றே அறிமுகம் செய்து கொண்டு மகளிர் வரிசையி ஒழுங்குப்படுத்தி கொண்டிருந்தார்.