தலைப்புகள்

  • அறிவியல்
  • அறிவியல் தொடர்
  • கட்டுரைகள்

Tuesday, July 5, 2016

ஒரு யோகியின் சுயசரிதம் - பரமஹம்ச யோகானந்தர் – என் அனுபவம் மற்றும் புத்தக விமர்சனம்



இதை ஒரு புத்தக விமர்சனம் என்று சொல்வதை விட என் வாழ்வில் கிடைத்த மகத்தான அனுபவம் என்று தான் சொல்ல வேண்டும். நான் கூறப்போகும் இச்சம்பவம் கிட்டதட்ட எட்டு ஆண்டுகளுக்கு முன் நடந்தது. எனக்கு அப்போது கடவுள் நம்பிக்கை அவ்வளவாக கிடையாது. மேலும் அறிவியலைத் தவிர அப்போது வேறு எதையும் நான் நம்புகிறவனும் அல்ல. என்னுடைய நண்பர் திரு.ரமேஷ்குமார் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க நான் பிரபஞ்சமும் டாக்டர் ஐன்ஸ்டீனும் என்ற புத்தகத்தை படிக்க நினைத்தேன். ஆனால் என்ன காரணத்தினாலோ அவர் வைத்திருந்த  புத்தகத்தை எனக்கு கொடுக்காமல் கடையிலிருந்து புதிதாக வாங்க சொல்லிவிட்டார். அவர் என்னுடைய குருநாதரும் கூட என்பதால் அப்புத்தகத்தை தேடும் முயற்சியில் இறங்கினேன்.

     தி.நகரில் நியூ புக் லாண்ட்ஸ் சென்று ஒவ்வொரு புத்தகமாக தேடிக் கொண்டே அந்த பெரிய அறையின் உள்விளிம்பிற்கு சென்று தேடிக் கொண்டிருந்தேன். அப்போது அந்த மூலையில் கடைசி புத்தகமாக ஆரஞ்சு நிறத்தில் தலையணைப் போல தடிமனாக ஒரு புத்தகத்தை கண்டேன். அதன் அட்டையில் ஏதோ ஒரு சாமியாரின் படம் அட்டையின் பெரும் பகுதியை ஆக்கிரமித்திருந்தது. அதன் தலைப்பைக் கூட சரியாக பார்க்கவில்லை ஆனால் அதற்குள்ளாக மனதிற்குள், இந்த மாதிரி சாமியார்கள் புத்தகம் எழுதி தன்பக்கம் பெரும் கூட்டத்தை வரவழைத்து பின்னர் ஏமாற்றுகின்றனரே. இது மாதிரியான போலி சாமியார்கள் எதற்காக புத்தகம் எழுதுகின்றனர் என்று தெரியாதா என்று இன்னும் என்னென்னவோ என் மனதிற்குள் எண்ணிக் கொண்டே அந்த இடத்தை கடந்து வந்து விட்டேன்.  

அதன் பின் பல வருடங்கள் கடந்தன.இடைப்பட்ட வருடங்களில் நானும் என் குருநாதரும் அறிவியல், தத்துவம், சமயம், உளவியல், புலன் கடந்த உளவியல், இலக்கியம் என பலவற்றை பற்றி விவாதித்திருந்தோம். வழக்கமாக மேற்கத்திய தத்துவத்தைப் பற்றி பேசும் நாங்கள் அன்று கிழகத்திய தத்துவத்தைப் பற்றி விவாதிக்க நேர்ந்தது. அப்போது அவர் ரமண மகரிஷி மற்றும் மகா பெரியவர் பற்றி ஏதோ கூற போய் இறுதியில் அது கடவுள் நம்பிக்கையில் வந்து நின்றது.

அறிவியலை நம்பும் எனக்கு கடவுளின் மீது நம்பிக்கையில்லை என்றதும் அவர் சிறிது வருத்தமடைந்ததை அவருடைய முகமே காட்டிக் கொடுத்தது. எனினும் அதை முழுவதுமாக வெளிக்காட்டாமல், அறிவியலால் எல்லாவற்றையும் விளக்க முடியாது என்றார். அவர் என்னுடைய குருநாதராக இருந்தாலும் அவரின் அதீத கடவுள் நம்பிக்கை அவரை அவ்வாறு எண்ண வைக்கிறது என்று நான் நினைத்தேன்.

நீ தவறாக நினைக்கவில்லையென்றால் நான் உனக்கு ஒரு கதை கூறுகிறேன், அதுவும் மகா பெரியவர் கூறிய கதை என்றார்.

ஒரு குறிப்பிட்ட ஆற்றில் மீன் பிடிக்கும் மீனவன், அந்த ஆறு முழுவதிலுமே அவன் வலையில் சிக்கும் அளவு வளர்ச்சி அடைந்த மீன்கள் மட்டும் தான் இருக்கும் என்று கூறுவது சரியா? என்று கேட்டார்.

நான் உடனடியாக அதெப்படி இருக்க முடியும்? ஆற்றில் வெவ்வேறு அளவுள்ள மீன்கள் இருக்கும். நாம் போடும் வலை என்ன மாதிரியானது, அந்த வலை பின்னப்பட்டிருக்கும் இடைவெளி முதலியவற்றைப் பொறுத்தே வலையில் எந்த அளவுள்ள மீன்கள் பிடிபடும் என்பது அமையும். அந்த வலையிலுள்ள இடைவெளியை விட சிறிய அளவிலான மின்கள் அவ்வலையில் மாட்டது என்றேன். உடனே அவர் சிரித்து கொண்டே அறிவியல் என்பதும் இது போல் ஒரு வலைதான். அறிவியல் வலை மூலம் நீ இந்த பிரபஞ்சத்தை பார்க்கும் போது அதன் ஓட்டையின் வழியே மற்றவற்றை உன்னால் பிடிக்க முடியாமல் போய் விடலாம். அதற்காக அறிவியலைத் தவிர்ந்து வேறெதுவுமில்லை என்று எவ்வாறு கூற முடியும் என்றார். அதுவரை அறிவியல் மட்டும் தான் உண்மை என்று எண்ணிய எனக்கு அதன் பின் தான் உண்மை விளங்க ஆரம்பித்தது. அதன் பின் என்னுடைய நம்பிக்கைகளும் மெதுவாக மாற ஆரம்பித்தது என்றாலும் கடவுளைப் பற்றி தெரிந்து கொள்ள நான் சில புத்தகங்களைப் படிப்பது அவசியமாகியது. அப்போது எனக்காக என்னுடைய குருநாதர் பரிந்துரைத்த புத்தகம் தான் ஒரு யோகியின் சுயசரிதை - பரமஹம்ஸ யோகாநந்தரின் வாழ்க்கை வரலாறு என்ற புத்தகம். நானும் வழக்கம் போல் அந்த புத்தகத்தை தேடி அலைந்தேன். கிட்டதட்ட ஏழு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தி.நகரில் நியூ புக் லாண்ட்ஸ் சென்று அந்த புத்தகத்தை தேடினேன். யாரையும் உதவிக்கு அழைக்காமல் நானே புத்தகத்தை தேடி எடுப்பது எனக்கு எப்போதுமே பிடித்த விஷயம் என்பதால் அவ்வாறே செய்ய அந்த கடையின் கடைசி விளிம்பின் ஓரத்திற்கு சென்றிருந்தேன். இந்த விளம்பிற்கு ஏற்கனவே வந்தது போல் உள்ளதே என்று எண்ணி என்னுடைய பார்வையை உயர்த்து கையில் மீண்டும் அதே ஆரஞ்சு நிற அட்டையில் பெரும்பாலான பகுதியை ஒரு சாமியார் ஆக்கிரமித்தபடி மிகவும் தடிமனான அந்த புத்தகம் என் கண்ணில்பட்டது. இதை முன்பு எப்போதோ பார்த்திருக்கிறேனே என்று எண்ணியப் போது அந்த பழைய சம்பவம் என் நினைவிற்கு வந்தது. இத்தனை வருடங்களாக இந்த புத்தகத்தின் இடத்தை மாற்றவில்லையா என்று தான் முதலில் தோன்றியது. ஆனால் ஏழு வருடங்களுக்கு முன்பிருந்த மனநிலை இப்போது எனக்கு இல்லையே. ஏனெனில் இப்போது நான் வாங்க வந்திருக்கும் புத்தகமே ஒரு யோகியின் சுயசரிதை ஆயிற்றே! எனவே இம்முறை அந்த சாமியாரை திட்டாமல் அந்த புத்தகத்தின் தலைப்பை பார்த்தேன். அது நான் எந்த புத்தகத்தை தேடி வந்தேனோ சாட்சாத் அதே புத்தகம் தான்.

உண்மையை சொல்லப் போனால் அப்போது நான் வெட்கப்பட்டு கூனி குறுகி போனதற்கு அளவேயில்லை. ஏழு வருடம் முன்பு எந்த புத்தகத்தையும் எந்த சாமியாரையும் நான் கண்டபடி திட்டினேனோ அதே புத்தகத்தை வாங்க இன்று அதே கடைக்கு வந்திருப்பதை எண்ணி ஆச்சர்யமும் அடைந்தேன். ஏனெனில் அந்த புத்தகத்தை தேடி நான் வேறு சில கடைகளையும் சென்றிருந்தேன். ஒருவேளை அங்கே எங்காவது இப்புத்தகம் கிடைத்திருந்தால் நிச்சயமாக எனக்கு ஏழு வருடங்களுக்கு முன் நான் திட்டிய அதே புத்தகம் தான் இது என்று தெரிந்திருக்காது. ஏனெனில் நான் அந்த சம்பவத்தை அப்போதே மறந்து விட்டிருந்தேன். அவ்வளவு கூட வேண்டாம். ஏழு வருடங்களுக்கு முன்நியூ புக் லாண்ட்ஸில் எங்கு அந்த புத்தகத்தைப் பார்த்தேனோ அதே இடத்தில் இல்லாமல் வேறு இடத்தில் இந்த புத்தகத்தை ஏழு வருடங்களில் அந்த கடை ஊழியர்கள் மாற்றி வைத்திருந்தாலும் நான் அதை பார்க்கும் வாய்ப்போ, அந்த பழைய சம்பவத்தை நினைவுவோ எனக்கு வராமல் போயிருக்கு. ஆனால் அவ்வாறு நடக்காமல் எல்லாம் முன்கூட்டியே திட்டமிட்டது போல் சரியாக அமைந்ததற்கு அறிவியல் கொடுக்கும் விளக்கம் வெறும் தற்செயல். ஆனால் நடந்த சம்பவமோ, அந்த புத்தத்தைப் படித்த பின் என் வாழ்க்கை மாறிய விதத்தையும் பார்க்கும் போதும் நான் ஒரு வானியல் கழக உறுப்பினராக, முதுகலை கணிதம் பட்டம் பெற்றவனாக, பல அறிவியல் புத்தகங்களை எழுதியவனாக இருந்தும் என்னால் அதை வெறும் தற்செயல் என்று எண்ண முடியவில்லை.

சரி இவ்வளவையும் சொல்லிவிட்டு அந்த புத்தகத்தைப் பற்றி சொல்லவில்லை என்றால் நன்றாக இருக்குமா?

முன்னரே சொன்னது போல அப்புத்தகம் பரமஹம்ஸ யோகா நந்தர் தன்னைப் பற்றி எழுதிய சுயசரிதை. அற்புதங்களும் அதிசயங்களும் எதிர்பாராமல் நடப்பதுதான்.முகுந்தனின் வாழ்விலும் அப்படி நடந்த பல அற்புதங்களையும் அதிசங்களையும் அப்புத்தகத்தின் முதல் பாதி விவரிக்கிறது. சாதாரண முகுந்தன் எப்படி நாடு போற்றும் பரமஹம்ஸ யோகாநந்தர் ஆனார் என்பதை மிகவும் எளிமையான மொழியிலேயே அவர் கூறுகிறார். சிறுவயது முதலே தான் ஒரு சாமியாராக வேண்டும் என்று அதற்காக மிகச்சிறு வயதிலேயே வீட்டிற்குத் தெரியாமல் நண்பர்களுடன் சேர்ந்து இமயமலை செல்வதும், முகுந்தனின் தந்தை ரயில்வே துறையில் பணிபுரிந்து வந்ததால் முகுந்தனை தேடி இமயமலை செல்லும் அனைத்து ரயில் நிலையங்களிலும் தேடுதல் வேட்டை நடத்தியும், இவர்கள் மாறுவேடத்திலிருப்பதால் கண்டுபிடிக்க முடியாமல் போனாலும், தவத்தின் வலிமைப் பற்றி முகுந்தனின் நண்பர்களிடம் அவன் கூறிய ஒரு சிறு விஷயம் அவர்கள் காவலர்களிடம் மாட்டிக் கொள்ள வழிவகுத்ததை நினைக்கும் போது சிரிக்கத் தோன்றுகிறது. உண்மையில் யோகானந்தரும் ஆரம்பத்தில் கோபப்பட்டாலும் இறுதியில் அவரும் சிரிக்கிறார். அப்படி என்ன சம்பவம் நடந்தது?

ரயிலில் தவத்தைப் பற்றி முகுந்தன் தன் நண்பர்களிடம் விளக்கிக் கொண்டிருக்கும் போது, இமயமலையில் தவம் செய்யும்போது அங்கே புலிகள் நம்மை சுற்றித் திரிந்தாலும் நம்மை அது ஒன்றும் செய்யாது. ஏனெனில் அதுதான் தவத்தின் வலிமை என்று கூறப் போக ஒரு நண்பன் தானாக காவலர்களிடம் மாட்டிக் கொண்டு மற்றவர்களையும் மாட்டி விட்டு விட முகுந்தனுக்கு ஒரே கோபம். காவல் நிலையத்தில் அவனிடம் முகுந்தன் கோபமாக காரணம் கேட்க அவனோ புலிகள் உள்ள காட்டில் தவம் புரிந்து எந்த புலியின் வயிற்றுக்குள்ளும் செல்லும் எண்ணம் தனக்கு இல்லை என்று சென்னதும் அந்த இடத்திலேயே முகுந்தனுக்கு சரிப்பு வந்து விடுகிறது.

பள்ளியில் படிக்கும் முகுந்தன் அடிக்கடி இப்படி சாமியாகிறேன் என்று கூறி வீட்டை விட்டு கிளம்பி விடுவதால், முகுந்தனின் பெரிய அண்ணன் (கிட்டதட்ட இருவருக்கும் பத்து வயது வித்தியாசம்) இப்படி அடிக்கடி கடவுள், தவம் என்றெல்லாம் சொல்கிறாயே. தந்தை சம்பாதியத்தில் உணவும், உடையும், இருக்க இடமும் சரியாக கிடைத்து விடுவதால் தானே நீ எப்போதும் இப்படி கடவுள் கடவுள் என்று அலைந்து கொண்டிருக்கிறாய். இல்லையென்றால் நீ உணவுக்காக தானே இவ்வாறு அலைந்து கொண்டிருந்திருப்பாய்? என்று வினவ அதற்கு முகுந்தனோ, கடவுளுக்கு நிகராக வேறெதுவுமில்லை. ஒருவேளை உணவிற்கே சிரமப்பட்டு கொண்டிருந்தாலும் அப்போதும் தான் கடவுளை நோக்கி தன் பயணத்தையே மேற்கொள்வதாக கூறிய அவன் இந்த பெரிய பிரபஞ்சத்தில் கடவுள் தனக்கான உணவை கட்டாயம் வழங்குவார் என்றும் கூற இருவருக்குமான வாக்குவாதம் முற்றியது.

உடனே முகுந்தனின் அண்ணன், அப்படியென்றால் கல்கத்தாவிலிருந்து பிருந்தாவனத்திற்கு கையில் எந்த பணமுமில்லாமல் சென்று மீண்டும் குறிபிட்ட நேரத்திற்குள் திரும்ப வரவேண்டும். கையில் கல்கத்தாவிலிருந்து பிருந்தாவனத்திற்கான ரயில் பயணச்சீட்டு மட்டுமே வைத்து கொண்டு அங்கு செல்ல வேண்டும். மீண்டும் திரும்ப வரும் வரை உணவு, திரும்புவதற்கான பயணச்சிட்டு என அனைத்து கடவுள் தான் வழங்க வேண்டும். ஏனெனில் எந்த நிலையில் தங்களுடைய நிலையைப் பற்றியும், அண்ணனுடன் செய்து கொண்ட சவால் பற்றியோ யாரிடமும் கூர கூடாது. மேலும் எந்த நிலையிலும் உணவிற்காக பிச்சை எடுக்கவும் கூடாது என்பது அந்த நிபந்தனைகளில் ஒன்று. இவை ஆனைத்தும் சரியாகத் தான் நடக்கிறதா என்பதை கண்காணிக்க முகுந்தனின் நண்பனும் உடன் அனுப்பப்படுகிறான். அதுவும் அவ்விருவரின் உடைகளையும் களைந்து அவர்கள் தனக்குத் தெரியாமல் ஏதாவது பணத்தை மறைத்து கொண்டு செல்கிறார்களா என்று கண்காணிப்பதற்காக. அப்படி எதுவுமே இல்லாமல் வெறும் கடவுள் நம்பிக்கையை மட்டுமே வைத்து செல்லும் சிறுவர்கள் திரும்ப பத்திரமாக குறிப்பிட்ட நேரத்திற்குள் வந்தார்களா? அந்த சவால் ஜெயித்தார்களா என்பதை நீங்களே அந்த புத்தகத்தைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த ஒரு சம்பவம் மட்டுமல்ல, அவரின் வாழ்வில் நடந்த பல சம்பவங்களும், அதில் கடவுள் நிகழ்த்திய அதிசயங்களும் அந்த புத்தகம் முழுவதும் விவரிக்கப்பட்டிருக்கிறது. தன் சகோதரி கேட்ட பட்டம் வானிலிருந்து அருந்து கைக்கு பக்கத்தில் இருப்பது, படிக்காமலேயே கல்கத்தா பல்கலை கழகத்தில் பட்டம் பெறுவது, தெருவில் சாதாரணமாக போகும் ஒருவன் திடீரென யோகானந்தரின் அறையில் விலையுயர்ந்த பொருட்களையெல்லாம் விட்டு விட்டு கட்டிலுக்கு அடியில் வைக்கப்பட்டிருக்கும் காளிபிளவர்களிலிருந்து ஒரேயொரு காளிபிளவரை மட்டும் திருடிச் செல்வது, தனது குரு யுக்தேஸ்வர் கிரியின் துணையுடன் கடவுளை காண்பதும், பாபாஜியுடன் உரையாடுவதும் என பல அதிசயங்கள் மிகவும் இயல்பாக அவரது வாழ்வில் நடப்பதை படிக்கும் போதே நமக்கு அது ஆனந்தத்தை அளிக்கிறது.

மேலும் ஸ்ரீ யுதேஸ்வர் கிரி இலை மறை காயாக பரமஹம்ஸருக்கு சொல்லித் தரும் பல விஷயங்கள் நம்முடைய வாழ்விற்கும் உதவக்கூடியது என்பதால் அது ஏதோ புண்ணிய ஆத்மாகளுக்கோ அல்லது சாமியார்களுக்கோ மட்டும் சொல்லப்படும் அறிவுரையாக அமையாமல் படிக்கும் அனைவரின் வாழ்விலும் உபயோகிக்கும் வண்ணம் உள்ளது. உதாரணத்திற்கு ஸ்ரீ யுக்தேஸ்வர் கிரி ஏதோ உபதேசம் செய்து கொண்டிருக்க அதை அவரது சீடர்கள் அனைவரும் கேட்டுக்கொண்டிருப்பர். அப்போது பரமஹம்ஸரை ஒரு கொசு தொடர்ந்து அவரது கவனத்தை கலைக்க சற்றும் தாமதிக்காமல் அவருடைய கை அன்னிச்சையாக அந்த கொசுவை கொல்ல தனது கையை உயர்த்தி விடுவார். பின்னர் சுதாரித்துக் கொண்டு கொல்லாமையை எண்ணி ஒங்கிய கையை அப்படியே நிறுத்திவிட அவருடைய குருவோ உடனே, ஏன் நிறுத்திவிட்டாய்? உனது மனதால் எப்போதோ அந்த கொசுவை கொன்று விட்டாய். இப்போது நீ செய்ய வேண்டியதெல்லாம் வெறும் அதை அடிக்க வேண்டியது மட்டும் தான் எனும் போது அதன் உள்ளார்ந்த அர்த்தம் அதைப் படிக்கும் நமக்கும் புரிகிறது.


கடவுளைப் பற்றிய உபதேசங்களோ, விளக்கங்களோ தெரிந்து கொள்ள நினைத்தாலோ, கடவுள் நம்பிக்கையின் ஆரம்ப நிலையிலிருந்தாலோ அவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம். அவர்களே கட்டாயம் படிக்க வேண்டியது எனில் கடவுள் நம்பிக்கையுள்ளவர்களுக்கு செல்லவா வேண்டும்.