தலைப்புகள்

  • அறிவியல்
  • அறிவியல் தொடர்
  • கட்டுரைகள்

Sunday, December 25, 2016

தங்கல் - இது ஒரு திரை விமர்சனம் அல்ல, சுய விமர்சனம்

நான் எழுதுவதை நிறுத்தி பல மாதங்கள் ஆகிறது. அதற்கான காரணங்கள் பல. சிலவற்றை வெளியே பொதுவில் கூற முடியாத அளவிற்கு ரகசியமானது. ஆனால் நேற்று பார்த்த தங்கல் திரைப்படம் என்னை மீண்டும் எழுத வைத்தது. இதில் குறிப்பிடதக்கது என்னவெனில் இதுவரை நான் ஒரு திரைப்பட விமர்சனம் எழுதியதேயில்லை.
இதை எழுதும் முன்னரே சொல்லிவிடுகிறேன். பெற்றோரின் கனவுகளை பிள்ளைகள் மேல் திணிப்பது சரியா என்ற விவாதத்திற்கே நான் செல்லவில்லை. ஏனெனில் அது இங்கே முழுவதுமாக தேவையற்றது என்று ஒதுக்கி வைக்கிறேன். அதற்கான காரணத்தை இறுதியில் பார்க்கலாம்.
தங்கல், அமீர் கானின் திரைபடம். அதில் அவர் எவ்வாறெல்லாம் உடலை மெருகேற்றி நடித்திருக்கிறார். ஒரு மல்யுத்த வீரனாக கட்டிளம் காளையாகவும், ஒரு பதின் வயது பெண்ணின் தந்தையாகவும் அவர் எப்படி தன்னை தகவமைத்துக் கொண்டார் என்றோ, அந்த திரைப்படத்தின் இசை, நடிப்பு, இயக்கம் அல்லது இந்த சீனை இப்படி எடுத்திருக்கலாம் என்ற எதையுமே நான் சொல்லப் போவதில்லை. நான் இங்கே கூற நினைப்பது எல்லாம் தங்கல் திரைப்படத்தின்  கதை எப்படி இந்திய பெண்களின் கழலை சித்தரிக்கிறது என்பது மட்டுமே.
அமீர் கான் ஒரு தேசிய அளவிலான மல்யுத்த வீரர். பல கனவுகளோடு சந்திக்க நினைத்தவருக்கு குடும்ப சூழ்நிலை மற்றும் பொதுவான இந்திய மனோபாவமான இந்த மல்யுத்தத்தால் என்ன சாதித்து விடப் போகிறாய் என்ற அவரது பெற்றோர்களின் எண்ணம் காரணமாக மல்யுத்தத்தை விட்டு ஒரு சாதாரண குமாஸ்தாவாக வாழ்க்கை நடத்த வேண்டிய நிலை. இந்நிலையில் அவருக்கு பிறக்கும் குழந்தையை எப்படியேனும் ஒரு மல்யுத்த வீரனாக்க ஆசைப்படுகிறார் அமீர் கான். ஆனால் அவருக்கு பிறந்ததோ பெண் குழந்தை. அதுவும் ஒன்றன் பின் ஒன்றாக நான்கு. இனி ஆண் குழந்தைக்கான முயற்சியே எடுக்க முடியாத நிலையில் தான் ஏன் அவரது பெண்களை மல்யுத்த வீராங்கனைகளாக்க கூடாது என்ற எண்ணம் தோன்ற அவர்களுக்கு அமீர்கானே பயிற்சியளிக்க ஆரம்பிக்கிறார். அவர்கள் சாதித்தார்களா? அமீர் கானின் எண்ணம் நிறைவேறியதா என்பது தான் கதை.
ஒரு ஆண் மிக எளிமையாக சாதாரணமாக செய்யகூடிய காரியங்களை ஒரு பெண்ணால் ஏன் நம் இந்திய சமூகத்தில் செய்ய முடிவதில்லை என்பதற்கான கேள்வியை இப்படம் மிகவும் ஆணித்தனமாக காட்டுகிறது. அப்படியே ஏதாவது செய்ய நினைத்தாலும் அதை நம் சமூக அமைப்பு எவ்வாறு எடுத்து கொள்ளும்?  எவ்விதம் பேசுவார்கள் என்பதை மிகத் தெளிவாக இப்படம் உணர்ந்துகிறது. மேலும் ஒரு பெண்ணை அந்த குடும்பத்தில் உள்ளவர்களே எவ்வாறு பார்க்கிறார்கள் மற்றும் அவர்கள் ஆண்களைப் போல் மல்யுத்தம் செய்வதில் என்னென்ன பிரச்சனை இருக்கிறது என்பதை அழகாக காட்டப்படுகிறது. அதை விட முக்கியமாக ஆணோ பெண்ணோ, முதலில் மல்யுத்தம் என்பது எவ்வளவு சிரமமானது மற்றும் எந்த ஒரு விஷயத்தை சாதிக்க வேண்டுமானாலும் அதற்கு எவ்வளவு கடுமையான பயிற்சியும் விடாமுயற்சியும் தேவை என்பதை இப்படம் உணர்த்த தவறவில்லை.
பயிற்சியின் முதல் நாள் காலை ஐந்து மணிக்கு அந்த பெண்களுக்கு பானிப் பூரி வாங்கி கொடுத்து விட்டு இன்றோடு உங்களுக்கு பானிப் பூரியே கிடையாது. எந்த மல்யுத்த வீரனும் பானிப் பூரியே சாப்பிட மாட்டார்கள் என்று சொல்லும்  காட்சியிலேயே புரிந்து விடுகிறது, இவர்கள் இதன் பின் எவ்வளவு பயிற்சி எடுக்க வேண்டியிருக்கும்  என்று.
பெண்கள் மல்யுத்த பயிற்சி மேற்கொள்கிறார்கள் என்றதும் அதற்கான நடைமுறை சிக்கலிருந்து தொழிற்முறை பயிற்சி அளிக்க ஒதுக்கப்படும் நிதி அதற்கான பதவியிலிருப்பவர்களின் அலட்சியம் என அனைத்தும் நாம் நினைத்து கொண்டிருக்கும் வளரும் இந்தியாவின் மற்றொரு முகம்.
பயிற்சியின் ஆரம்ப நாட்களில் அந்த பெண்கள் ஆண்களிடம் மோதி தான் தங்களின் இலக்கை அடைய முடியும் என்னும் நிலையில் ஆண்கள் அவர்கள் மேல் செலுத்தும் அலட்சிய பார்வை, ஆண்களை பெண்கள் வெற்றி கொண்ட பின் அந்த ஆண்களை இந்த சமூகம் கேவலமாக பேசுவது என்பது நம்முடைய பழைய மனப்பான்மையை தோலுரித்து காட்டுகிறது. அது நம்முடைய பெண்களுக்கு எவ்வளவு பெரிய முட்டுக்கட்டையை எழுப்புகிறது என்பதை உங்களால் உணர முடிகிறதா?
ஒரு பெண் தன்னை மல்யுத்தத்தில் நிரூபிக்க கட்டாயம் ஆண்களுடன் போட்டியிட்டு தீர வேண்டும். அதில் வெற்றி பெற்று கிடைக்கும் அங்கிகாரம் தான் அவளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும். இல்லையேல் அவள் மீண்டும் அடுப்பூத சென்று விட வேண்டும். ஆனால் அந்த ஆணுடன் மோதுவதும் அவ்வளவு எளிதானது அல்ல. எந்த ஆணும் ஒரு பெண்ணுடன் மோத காத்துக் கொண்டிருக்கப் போவதில்லை.
அது போல் எந்த பெண்ணிடம் தோற்றுப் போகும் ஆணையும் இந்த சமூகம் இயல்பாக எடுத்துக் கொள்வதில்லை. இதற்கான மாற்றத்தை எடுத்து வருவதே இத்திரைப்படம்.
இப்போது ஆரம்பத்தில் சொன்னதற்கு வருகிறேன். அமீர் கான் தனது விருப்பத்தை தன் குழந்தைகள் மீது திணித்தது தவறு என்று கூறுபவர்களுக்கு நான் கூற விரும்புவது, அமீர் கான் அதற்காக தனியாக வேறு ஒரு கதையில் நடிப்பார். அதை பார்த்து கொள்ளவும். அப்போது அந்த படத்தில் வேறு குறைகளை கண்டுபிடிக்கவும்.
திரைப்படம் என்பது மக்களை மகிழ்விப்பதற்காக என்று மட்டுமே என்று எண்ணுவோர் தயவு செய்து இப்படத்தை பார்க்க வேண்டாம். ஏனெனில் ஒரு வேளை நீங்கள் திருந்த வாய்ப்பிருக்கிறது. எனவே உஷார். அமீர் கான் தயவு செய்து இந்தியாவை விட்டு சென்று விட வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவதையும் மறுக்க இயலாது. ஏனெனில் அமீர் சார் தேர்ந்தெடுக்கும் கதை அவ்வளவு தரமானது. அதற்கான அவரது உழைப்பு அவ்வளவு நேர்த்தியானது. இது பழமைவாத எண்ணம் கொண்ட நமக்கு புத்துணர்ச்சி அளிக்கும் மருந்து.
என்னைப் பொறுத்தவரை தனிப்பட்ட முறையில் நான் ஒரு சிறந்த இந்திய குடிமகனோ, சிறந்த மகனோ, சிறந்த மாணவனோ இல்லை. ஆனால் நாளை நான் தந்தையானால் அமிர் கானைப் போல் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அது தவறு என்று சொல்பவர்களுக்கு நான் கூறுவது என்னவெனில் இப்போது மட்டும் நான் சிறந்தவனாக இருக்கிறேன்? இப்போது நான் இருப்பதை விட அது சிறந்த நிலைதான்.


No comments: