தலைப்புகள்

  • அறிவியல்
  • அறிவியல் தொடர்
  • கட்டுரைகள்

Monday, February 6, 2012

சுஜாதாவின் பத்துக் கட்டளைகள்


சுஜாதாவின் அத்தனை கட்டுரைகளும் எனக்குப் பிடிக்கும் என்றப் போதிலும் இந்தப் பத்துக் கட்டளைகளைப் பற்றி நான் இப்போது தான் அறிந்தேன். எனவே அதனை உங்கள் பார்வைக்கு அனுப்புகிறேன்......

சுஜாதாவின் பத்துக் கட்டளைகள்

1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவதுநம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது.


2.
அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்து பாருங்கள். அவர்கள் கேட்பது உங்களால் செய்யக் கூடியதாகவே இருக்கும். பொடிநடையாகப் போய் நூறு கிராம் காப்பி பவுடர் () ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படிதான் இருக்கும்.


3.
மூன்று மணிக்குத் துவங்கும் மாட்டனி போகாதீர்கள். க்ளாஸ் கட்பண்ண வேண்டி வரும். தலைவலி வரும். காசு விரயம். வீட்டுக்குப் போனதும் பொய் சொல்வதற்கு ரொம்ப ஞாபக சக்தி வேண்டும். இந்த உபத்திரத்துக்கு உண்மையைச் சொல்லிவிடுவது சுலபம். இளமைக்காலம், ஒளிக் கீற்றைப் போல் மிகவும் குறைந்த காலம், அதை க்யூ வரிசைகளிலும் குறைபட்ட தலைவர்களுக்காகவும் விரயம் செய்யாதீர்கள்.


4.
நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது விஷயங்களைப் படியுங்கள். பொது விஷயங்கள் என்றால் கதை, சினிமா, காதல் இல்லாதவை. உதாரணம்யோக்கியமான செய்தித்தாள், மற்ற பேரைப் பற்றிக் கவலைப்படும் பத்திரிகைகள் அல்லது லைப்ரரியிருந்து ஒரு புத்தகம்.


5.
ஐந்து ரூபாய் சம்பாதித்துப் பாருங்கள். சொந்தமாக உங்கள் உழைப்பில், முயற்சியில், யோக்கியமாக, மனச்சாட்சி உறுத்தாமல். அடுத்த முறை அப்பாவிடம் ஆயிரம் ரூபாய்க்கு ஷர்ட், சுடிதார் கேட்கும் முன்.


6.
இந்தச் தகவல்களை படிக்கும் நிலைமை பெற்ற நீங்கள் இந்திய சனத்தொகையின் மேல்தட்டு ஆறு சதவிகித மக்களில் ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக அலையும், வசதியில்லாத கோடிக்கணக்கான மக்களைத் தினம் ஒரு முறை எண்ணிப் பாருங்கள்.

7. வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று என்ன செய்தாலும் காதல் பிஸினஸ் வேண்டாம். காதலுக்கு ரொம்பச் செலவாகும். மனம், வாக்கு, காயம்(உடல்), எல்லாவற்றையும் ஆக்கிரமிக்கும் தீ அது. பொய் நிறையச் சொல்ல வேண்டும். வினோதமான இடங்களில் காத்திருக்க வேண்டும். இந்த வயதில் நாசமாய்ப்போன படிப்புத்தான் உங்களுக்கு முக்கியம்.குறிப்பு: பெண்களை சைட் அடிப்பதும், கலாட்டா பண்ணுவதும், அவர்களுக்கு கர்சீப் முதலியன ரோடிலிருந்து பொறுக்கிக் கொடுப்பதும், உபத்திரமில்லாத கவிதைகள் எழுதுவதும், காதலோடு சேர்த்தியில்லை.

8.
எட்டு முறை மைதானத்தை சுற்றி ஓடினால் எந்தச் சீதோஷ்ணமாக இருந்தாலும் நெற்றி வியர்வை அரும்பும். எதாவது தேகப் பயிற்சி செய்யவும். கடிகாரத்துக்குச் சாவி கொடுப்பதோ சீட்டாடுவதோ தேகப் பயிற்சி ஆகாது. எதையாவது தூக்குங்கள், எதையாவது வீசி எறியுங்கள். உங்கள் உடலில் ஊறும் உற்சாகத்துக்கு ஓர் ஆரோக்கியமான வடிகால் தேவை. ராத்திரி சரியாக தூக்கம் வரும். கன்னா பின்னா எண்ணங்கள் தவிர்க்கப்படும். ஒழுங்காக சாப்பிடத்தோன்றும். பொதுவாகவே சந்தோஷமாக இருக்கும்.

9.
ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வரவும். மிஞ்சிப் போனால் ஒன்பது மணி இரண்டு நிமிடம். ஒரு மணி நேரம் பாடம் அல்லது புத்தகம் படிக்கலாம்.

10.
படுக்கப் போகும் முன் பத்து நிமிஷமாவது அம்மா, அப்பா, அண்ணன், தங்கை யாருடனாவது பேசவும் (பேசுவது என்று சொன்னவுடன் காதலியுடன் என்று நினைக்க வேண்டாம், நான் சொன்னது குடும்பத்தினருடன் மட்டும்). எதாவது ஒரு அறுவை ஜோக் அல்லது காலேஜில் நடந்த நிகழ்வுகள். சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவது தான்.

இந்த பத்தில் தினம் ஒன்று என்று முயற்சி செய்து தான் பாருங்களேன்.

Friday, August 5, 2011

கமல்ஹாசன் பற்றி சுஜாதா


கமல்ஹாசன் பற்றி சுஜாதா



கமலஹாசனுடன் கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்ததில் அவருடைய off-screen personality சுவாரஸியமாக வெளிப்பட்டது.இருபத்து மூன்று வயது. ஒரு மலையாளப் படப்பிடிப்பிலிருந்து வந்திருந்தார்.பஞ்சு மிட்டாய் வண்ணத்தில் ஜிப்பா,ஜரிகை வேஷ்டி.

அவர் அறையில் ஆடம்பரங்கள் எதுவும் இல்லை.ஏர்கண்டிஷனிரின் செளகரியத்தைத் தவிர.ஒரே ஒரு படம் இருந்தது.உக்கிரமாக முறைக்கும் ப்ரூஸ்லி. அமெரிக்க சினிமா சரித்திரத்தைப்பற்றியும் Sound in cinema பற்றியும் புத்தகங்கள் தென்பட்டன.படிக்கிறார்.இங்கிலிஷ் பண்பட்டு இருக்கிறது.கணையாளி போன்ற புத்தகங்களையும் புதுக்கவிதைகளையும் ரசிக்கிறார்.தன் தொழிலில் உள்ள சிரிப்பான விஷயங்களை இயல்பாக எடுத்துச்சொல்கிறார்.போலன்ஸ்கி,கோடார்ட் போன்ற ஐரோப்பிய டைரக்டர்களைப் பற்றிஅவருக்கு தெரிந்திருக்கிறது.ஆல்பிரட் ஹிட்ச்காக்கின் Frenzy என்ற படத்தில் ஒரு ஷார்ட்டைப் பற்றி உற்சாகமாக அவருடன் பத்து நிமிடங்கள் அலச முடிகிறது."மலையாளப் படங்கள் இப்போது பரவாயில்லை போலிருக்கிறதே" என்றேன்.அவர் "அதெல்லாம் அந்தக்காலம்,இப்போது மலையாளப் படங்கள் பின்னோக்கிப் போய்க்கொண்டிருக்கின்றன"தன் சட்டையைக் காட்டி "மலையாளப் படம்" என்றார்.

"எனக்கு அழவரவில்லை அழு அழு என்கிறார்கள்.ஒரு சமீபத்திய தமிழ் படத்துக்கு மூன்று பாட்டில் கிளிசரின் ஆயிற்று."

"பாடலைப் படமெடுக்கும் போது கதாநாயகிக்கு கூந்தல் விரிந்திருப்பது ஒரு செள்கரியம்.உதட்டசைவு மறந்துவிட்டால்! சட்டென்று கூந்தலைப் பிரித்து அதில் மறைந்து கொள்ளலாம்."

"டேய் முத்து,மாடசாமி,பிடிடா"என்று கிராமத்தில் குடிசையில் வின்சென்டர் ரைபிள்களை வினியோகிக்கும் கர்ணன் படங்களையும் படுத்துக்கொண்டே படமெடுக்கும் காமிராக்கோணங்களையும்(imagine ஜோதிலட்சுமி)அம்மாக்களையும்,தியாகங்களையும் மிகவும் ரசித்து அவருடன் விமர்சித்துக் கொண்டிருந்ததில் எனக்கு நேரம் போனது தெரியவில்லை.படப்பிடிப்பு காத்திருந்தது.ஆப்பிள் ஜூஸ் கொடுத்து அனுப்பிவிட்டார்.

உரக்கப் பேசும் உரக்க நடிக்கும் தமிழ் சினிமாவில் சற்று மென்மையாக,கற்பனையுடன்,நம்பும்படி நடக்கும் கமலஹாசனிடம் தமிழில் நவசினிமாவில் உதயத்தை எதிர்பார்க்கிறேன்.